Published : 30 Nov 2022 09:14 AM
Last Updated : 30 Nov 2022 09:14 AM

அனுமதியின்றி பாத யாத்திரை நடத்தியதாக ஆந்திர முதல்வரின் தங்கை காரில் இருந்தபடியே கைது

போலீஸார் கைது செய்தபோது ஷர்மிளா காரிலேயே அமர்ந்திருந்தார். இதையடுத்து போலீஸார் அவரை காரில் வைத்தபடி கைது செய்து, கிரேன் மூலம் காரை இழுத்துச் சென்றனர். படம்: பிடிஐ

ஹைதராபாத்: தெலங்கானாவில் அனுமதியின்றி பாதயாத்திரை மேற்கொண்டதாக ஒய்எஸ்ஆர் தெலங்கானா கட்சியின் தலைவரும், ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் தங்கையுமான ஷர்மிளாவை நேற்று ஹைதராபாத் போலீஸார் கைது செய்தனர்.

ஒய்எஸ்ஆர் தெலங்கானா கட்சியின் தலைவரான ஒய்.எஸ். ஷர்மிளா கடந்த 2 நாட்களாக வாரங்கல் மாவட்டத்தில் பாத யாத்திரை மேற்கொண்டு வந்தார். அப்போது அவர் நரசம்பேட்டா டிஆர்எஸ் கட்சி எம்.எல்.ஏ.வான சுதர்சன் மீது கடுமையாக விமர்சனம் செய்தார். இதனால் டிஆர்எஸ் கட்சியினர் மற்றும் எம்எல்ஏவின் ஆதரவாளர்கள் ஆத்திரமடைந்தனர்.

இதையடுத்து, ஷர்மிளாவின் பாத யாத்திரையை அவர்கள் பல இடங்களில் வழி மறித்து ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். எம்.எல்.ஏ.விடம் பகிரங்கமாக ஷர்மிளா மன்னிப்பு கேட்கவேண்டும் என வலியுறுத்தினர். இந்நிலையில், ஷர்மிளா உபயோகப்படுத்திய கேரவன் வாகனம், எம்.எல்.ஏ.க்களின் ஆதரவாளர்களால் தீவைத்து எரிக்கப்பட்டது. இதனால், அங்கு பதற்றம் ஏற்பட்டது.

இதைத் தொடர்ந்து, ஷர்மிளா கட்சியினருக்கும், ஆளும் கட்சியினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து மன்னிப்பு கேட்காமலேயே ஷர்மிளா பாத யாத்திரை மேற்கொண்டதால், சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என கருதிய போலீஸார், ஷர்மிளாவை கைது செய்தனர். அவரை போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்று அதன் பின்னர் சொந்த ஜாமீனில் விடுவித்தனர்.

ஆனால், இன்று அவர் வாரங்கலில் தனது பாத யாத்திரையை தொடங்க வேண்டி இருப்பதால், அவர் மீண்டும் காரில் வாரங்கலுக்கு சென்று கொண்டிருந்தார். இதனால், ஷர்மிளா, முதல்வர் சந்திரசேகர ராவின் வீட்டை முற்றுகையிட செல்வதாக புரளி கிளம்பியது. இதனால், அவரை ஹைதராபாத் எஸ்ஆர் நகர் போலீஸார் கைது செய்ய முயன்றனர். அப்போது அவர், தான் வாரங்கல் செல்வதாக போலீஸாரிடம் தெரிவித்தார். ஆயினும் அதனை கண்டுகொள்ளாத போலீஸார் அவரை கைது செய்து காரை கிரேன் உதவியுடன் இழுத்துச் சென்றனர். அப்போது ஷர்மிளா டிரைவிங் சீட்டிலேயே அமர்ந்திருந்தார்.

பின்னர் அவருடன் இருந்த மேலும் 5 பேர் மீதும் எஸ்ஆர் நகர்போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.நேற்று மாலை ஷர்மிளா உட்பட 6 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. இதையடுத்து ஹைதராபாத்தில் இவரது கட்சி ஆதரவாளர்கள் ஆங்காங்கே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனிடையே, தனது மகள் கைது செய்யப்பட்டதால், ஷர்மிளாவின் தாயார் விஜயலட்சுமி எஸ்ஆர் நகர் போலீஸ் நிலையத்திற்கு கிளம்பினார். ஆனால், அவரை வீட்டில் இருந்து கிளம்பும் முன்பே போலீஸார் வீட்டுக்காவலில் வைத்தனர். இதனால் அவர் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x