Published : 18 Jul 2014 10:23 AM
Last Updated : 18 Jul 2014 10:23 AM

இந்தியாவை சோதனையில் இருந்து மீட்டார் ரஹானே: சொந்த மண்ணில் சாதித்தார் ஆண்டர்சன்

இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் இன்னிங்ஸில், ரஹானேவின் அற்புதமான சதத்தின் துணையுடன் இந்தியா சரிவில் இருந்து மீண்டது.

முதல் நாள் ஆட்ட நேர முடிவில், இந்திய அணி 90 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 290 ரன்கள் எடுத்திருந்தது. அப்போது, முகமது ஷமி 14 ரன்களுடனும், இஷாந்த் சர்மா 12 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். லார்ட்ஸில் வியாழக்கிழமை தொடங்கிய இந்த டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் குக் பீல்டிங்கை தேர்வு செய்ய, இந்தியா பேட் செய்ய ஆரம்பித்தது.

வழக்கம்போல் இந்த முறையும் ஷிகர் தவண் ஏமாற்றினார். அவர் 7 ரன்கள் மட்டுமே எடுத்தார். இதையடுத்து முரளி விஜயுடன் இணைந்தார் புஜாரா. இந்த ஜோடியும் சிறிது நேரமே தாக்குப்பிடித்தது. இந்தியா 48 ரன்களை எட்டியபோது முரளி விஜய் 24 ரன்களில் ஆட்டமிழந்தார்.

இதையடுத்து விராட் கோலி களமிறங்க, மதிய உணவு இடைவேளையின்போது 27 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 73 ரன்கள் எடுத்திருந்தது இந்தியா. ஆனால் இடைவேளைக்குப் பிறகு இந்தியா சரிவுக்குள்ளானது. விராட் கோலி 25, புஜாரா 28, கேப்டன் தோனி 1, ரவீந்திர ஜடேஜா 3 ரன்களில் வேகமாக வெளியேற, 50.4 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 140 ரன்கள் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டது இந்தியா.

தேநீர் இடைவேளையின்போது இந்திய அணி 55 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 140 ரன்கள் எடுத்திருந்தது. ஸ்டூவர்ட் பின்னி 6 ரன்களுடன் களத்தில் இருந்தார். ஒரு பக்கம் விக்கெட்டுகள் மளமளவென சரிய, எதிர்முனையில் 'புதிய' தடுப்புச் சுவர் போல் நிதானமாக பேட் செய்து வந்தார் ரஹானா. பின்னி 9 ரன்களில் ஆட்டமிழக்க, ரஹானேவுக்கு சற்றே துணையாக நின்ற புவனேஷ்வர் குமார் 36 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.

இந்திய அணியை சரிவில் இருந்து மீட்ட ரஹானா 154 பந்துகளில் 103 ரன்கள் எடுத்த நிலையில், ஆண்டர்சனின் பந்துவீச்சில் காட் அண்ட் பவுல்ட் ஆனார்.

சாதித்தார் ஆண்டர்சன்

ஷிகர் தவணை ஆட்டமிழக்கச் செய்ததன் மூலம் இங்கிலாந்து மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட் (230) வீழ்த்திய இங்கிலாந்து வீரர் என்ற சாதனையைப் படைத்தார் ஜேம்ஸ் ஆண்டர்சன். 55-வது போட்டியில் அவர் இந்த மைல்கல்லை எட்டியுள்ளார்.

முன்னதாக பிரெட் ட்ரூமேன் 47 டெஸ்ட் போட்டிகளில் 229 விக்கெட்டுகளை வீழ்த்தியதே சாதனையாக இருந்தது. இவர்களுக்கு அடுத்தபடியாக இயான் போத்தம் 226 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். வேறு எந்த இங்கிலாந்து பௌலரும் சொந்த மண்ணில் 200 விக்கெட்டுகள் எடுத்ததில்லை.

வெளிநாட்டு பௌலர்களைப் பொறுத்தவரையில் ஆஸ்திரேலியாவின் ஷேன் வார்ன், இங்கிலாந்தில் 22 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 129 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x