நாடாளுமன்ற வளாகத்தில் ஜெயலலிதா சிலை வைப்பது சுலபம் அல்ல

நாடாளுமன்ற வளாகத்தில் ஜெயலலிதா சிலை வைப்பது சுலபம் அல்ல
Updated on
2 min read

இடப்பற்றாக்குறை இருப்பதால் 2010-ம் ஆண்டு தடை விதிக்கப்பட்டது

*

நாடாளுமன்ற வளாகத்தில் செல்வி ஜெயலலிதாவுக்கு சிலை வைப்பது சுலபமல்ல எனத் தெரிய வந்துள்ளது. ஏனெனில், இங்கு புதிதாக எவருக்கும் சிலை அல்லது உருவப்படங்கள் வைக்கக் கூடாது என இரு அவைகளின் கூட்டுக்குழு ஏற்கெனவே முடிவு செய்துள்ளது.

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 5-ம் தேதி காலமானார். அவருக்கு நாடாளு மன்ற வளாகத்தில் சிலை வைக்க வேண்டும் என அவரது கட்சியினர் கோரியுள்ளனர். கடந்த திங்கள் கிழமை பிரதமர் மோடியை தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சந்தித்தபோது, இது தொடர்பாக வும் கோரிக்கை வைத்தார்.

நாடாளுமன்ற வளாகத்தில் தேசியத் தலைவர்களின் சிலைகள் மற்றும் உருவப்படங்கள் வைப் பது குறித்த முடிவு எடுப்பதற்காக தனியே எம்.பி.க்கள் குழு இயங்கி வருகிறது. சபாநாயகர் சுமித்ரா மகாஜன் தலைமையிலான இக் குழுவில் மக்களவையின் 9 உறுப்பினர்களும் மாநிலங்களவை யின் 4 உறுப்பினர்களும் இடம் பெற்றுள்ளனர்.

கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் அப்போதைய சபாநாயகர் மீராகுமார் தலைமை யில் இக்குழு செயல்பட்டு வந்தது. அப்போது, “நாடாளுமன்ற வளாகத்தில் இடப்பற்றாக்குறை இருப்பதால், 2010-ம் ஆண்டுக்குப் பிறகு இங்கு சிலை வைக்கக் கூடாது. வேண்டுமானால் நாடாளு மன்ற வளாகத்தில் சிலை அல்லது உருவப் படங்கள் வைத்து விழா நடத்திய பிறகு அவற்றை நாடாளுமன்ற நூலகக் கட்டிடத்தில் உள்ள அருங்காட்சியகத்தில் வைத்து பாதுகாக்கலாம்” என முடிவு எடுக்கப்பட்டது. இந்த முடிவை மாற்றி ஜெயலலிதாவுக்கு சிலை வைக்க அனுமதி பெறுவது அவ்வளவு சுலபம் அல்ல என்று கூறப்படுகிறது.

இது குறித்து அக்குழுவின் உறுப்பினரான தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி எம்.பி., ஏ.பி.ஜிதேந்தர் ரெட்டி ‘தி இந்து’விடம் கூறும்போது, “தற்போது நாடாளுமன்ற வளாகத்தில் சிலைகள் வைக்க இடம் இல்லை. இதன் அடிப்படையில், 2010-ல் எடுக்கப்பட்ட முடிவு மாற்றக் கூடாதது என்பது அல்ல. அதே சமயம் உருவப்படங்கள் வைக்க இதுவரை எந்தத் தடையும் இல்லை எனக் கருதுகிறேன். சிலை வைப்பதற்கான அனுமதி கேட்டு அதிமுகவினர் இதுவரை எங்களிடம் கடிதம் அளிக்கவில்லை. அவர்கள் அளித்த பின் அது தொடர்பாக குழு ஆலோசிக்கும்” என்றார்.

மத்திய அரசுடன் நல்லுறவு

சமீப ஆண்டுகளாக நாடாளு மன்ற வளாகத்தில் சிலை அல்லது உருவப்படம் வைப்பது, மத்தியில் ஆளும் கட்சியிடம் சம்பந்தப்பட்டவர்களுக்கு இருக் கும் உறவை பொறுத்தது என்பதை போன்ற நிலை காணப்படுகிறது.

ஜெயலலிதா தனது அரசியல் ஆசான் எம்ஜிஆருக்கு நாடாளு மன்ற வளாகத்தில் சிலை வைக்க 8 ஆண்டுகள் முயற்சி எடுத்தார். இதற்கான அனுமதி கிடைத்த பின்பும் சிலை வைப்பதில் தாமதம் ஆனது. இதற்கு கடந்த 1999-ல் மத்தியில் வாஜ்பாய் தலைமையிலான ஆட்சியை அதிமுக கவிழ்த்ததே காரணமாகக் கூறப்பட்டது.

பிறகு முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறனுக்கு சிலை வைக்கக் கோரிய திமுக, இதற்கான அனுமதியை உடனடியாக பெற்றது. இதன் தொடர்ச்சியாக, கடந்த 2006-ம் ஆண்டு டிசம்பர் 6-ம் தேதி எம்ஜிஆர் சிலை வைக்கப்பட்ட மறுதினமே, மாறனுக்கும் வைக்கப் பட்டது.

கடைசியாக தெலுங்கு தேசம் கட்சியின் நிறுவனர் என்.டி.ராமாராவின் சிலை வைக்க அனுமதி வழங்கப்பட்டு, 2013, மே 7-ம் தேதி அவரது சிலை திறக்கப்பட்டது. ஆந்திராவைச் சேர்ந்த சுதந்திரப் போராட்ட வீரர் அல்லூரு சீத்தாராம ராஜுவுக்கு சிலை வைக்க வேண்டும் என தெலுங்கு தேசம் கட்சி சார்பில் முந்தைய ஆட்சியின் இறுதியில் 2013-ல் கேட்கப்பட்டது. இந்தக் கோரிக்கை அக்குழுவிடம் நிலுவையில் உள்ளது.

சுமித்ரா மகாஜன் தலைமை யிலான இக்குழுவில் மக்களவை சார்பில் துணை சபாநாயகர் எம்.தம்பிதுரை, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், காங்கிர ஸின் மல்லிகார்ஜுன கார்கே, திரிணமூல் காங்கிரஸின் சுதீப் பந்தியோபாத்யாய, பிஜு ஜனதா தளத்தின் பார்த்ரூஹரி மெஹதாப், சிவசேனாவின் அனந்த் கீதே, தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதியின் ஏ.பி.ஜிதேந்திரா ரெட்டி, தெலுங்கு தேசத்தின் நரசிம்மம் தோட்டா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

மாநிலங்களவை சார்பில் காங்கிரஸின் குலாம்நபி ஆசாத், திரிணமூல் காங்கிரஸின் பேரா சிரியர் ஜோகன் சவுத்ரி, பாஜக வின் சத்யநாராயண் ஜத்யா, மார்க்சிஸ்ட் கட்சியின் சீதாராம் யெச்சூரி ஆகியோர் உறுப்பினர் களாக உள்ளனர்.

வேண்டுமானால் நாடாளுமன்ற வளாகத்தில் சிலை அல்லது உருவப் படங்கள் வைத்து விழா நடத்திய பிறகு அவற்றை நாடாளுமன்ற நூலகக் கட்டிடத்தில் உள்ள அருங்காட்சியகத்தில் வைத்து பாதுகாக்கலாம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in