பழைய 500, 1000 டெபாசிட் செய்ய கட்டுப்பாடு; நம்பிக்கையற்ற அரசின் நம்பிக்கையற்ற நடவடிக்கை: ப.சிதம்பரம் குற்றம்சாட்டு

பழைய 500, 1000 டெபாசிட் செய்ய கட்டுப்பாடு; நம்பிக்கையற்ற அரசின் நம்பிக்கையற்ற நடவடிக்கை: ப.சிதம்பரம் குற்றம்சாட்டு
Updated on
1 min read

பழைய ரூபாய் நோட்டுகளை வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்வதற்கு விதிக்கப்பட்டுள்ள புதிய கட்டுப்பாடுகள் நம்பிக்கையற்ற அரசின் நம்பிக்கையற்ற நடவடிக்கை என முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் குற்றம்சாட்டி உள்ளார்.

செல்லாது என அறிவிக்கப்பட்ட 500, 1000 ரூபாய் நோட்டுகளை தங்கள் வங்கிக் கணக்கில் டிசம்பர் 30 வரை டெபாசிட் செய்யலாம் என மத்திய அரசு ஏற்கெனவே கூறியிருந்தது.

இந்நிலையில், ரூ.5 ஆயிரத்துக்கு மேல் ஒரு முறை மட்டுமே பழைய நோட்டுகளை டெபாசிட் செய்ய முடியும் என்றும் அதுவும் இத்தனை நாட்களாக ஏன் டெபாசிட் செய்யவில்லை என்று விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் ரிசர்வ் வங்கி திடீரென அறிவித்தது.

இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவரான ப.சிதம்பரம் நேற்று கூறியதாவது:

செல்லாது என அறிவிக்கப்பட்ட பழைய ரூபாய் நோட்டுகளை தங்களது வங்கிக் கணக்கில் செலுத்த ரிசர்வ் திடீரென கட்டுப்பாடு விதித்துள்ளது கண்டிக்கத்தக்கது. இந்த நோட்டுகள் டிசம்பர் 15 வரை சில குறிப்பிட்ட இடங்களில் பயன்பாட்டில் இருந்த நிலையில், வரும் 30-ம் தேதி வரை ஏன் டெபாசிட் செய்யக்கூடாது.

இந்த விவகாரத்தில் ரிசர்வ் வங்கியின் புதிய விதிக்கும் மத்திய நிதியமைச்சரின் கருத்துக்கும் முரண்பாடு உள்ளது. பொதுமக்கள் யார் கூறுவதை நம்ப வேண்டும்? இது நம்பிக்கையற்ற அரசின் நம்பிக்கையற்ற நடவடிக்கையாகவே உள்ளது.

கறுப்புப் பணம் பதுக்கியவர்கள் அதை வெள்ளையாக மாற்றிவிட்டார்கள். ஆனால் இந்த நடவடிக்கையால் ஏழைகளும் நடுத்தர மக்களும்தான் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in