

பிஹார் பாஜக எம்.பி. கிரிராஜ் சிங் வீட்டில் இருந்து ரூ.1.14 கோடி பணம் மற்றும் தங்கம், வெள்ளி நகைகள் கைப்பற்றப்பட்டுள்ள நிலையில், அவர் மீது கருப்பு பணத்துக்கு எதிரான நடவடிக்கை எடுக்காதது ஏன் என்று காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா கேள்வி எழுப்பினார்.
மக்களவையில் பட்ஜெட் மீதான விவாதத்தில் அவர் புதன்கிழமை பேசும்போது, “கிரிராஜ் சிங் வீட்டில் இருந்து ரூ.1.14 கோடி பணம் மற்றும் தங்கம், வெள்ளி நகைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. அவர் மீது கருப்பு பணத்துக்கு எதிரான நடவடிக்கையை மத்திய அரசு ஏன் எடுக்கவில்லை?
கருப்பு பண விவகாரத்தில் வழக்கமான நடவடிக்கைகளுக்கு பதிலாக மாறுபட்ட நடவடிக்கைகள் எடுக்கவேண்டும்” என்றார்.
அப்போது அவையில் இருந்த கிரிராஜ் சிங்கும், பிஹார் எம்.பி.க்கள் அஸ்வினி சவுபே, ராஜீவ் பிரதாப் ரூடி ஆகியோரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
ரூடி பேசும்போது, “நோட்டீஸ் அளிக்காமல் அவை உறுப்பினர் மீது குற்றச்சாட்டுகளை கூறக்கூடாது. எனவே காங்கிரஸ் உறுப்பினர் தான் பேசியதை திரும்பப் பெற வேண்டும். அவை யில் மன்னிப்பு கேட்க வேண்டும்” என்றார்.
இதற்கு சபாநாயகர் சுமித்ரா மகாஜன் கூறும்போது, “இதில் குற்றச்சாட்டு எதுவும் இல்லை. உறுப்பினர் சில பிரச்சினைகளை எழுப்புகிறார். இதில் ஆட்சேப னைக்குரிய கருத்து இருப்பதாக தெரியவந்தால் பின்னர் அவற்றை அவைக்குறிப்பில் இருந்து நீக்குகிறேன். இதுபோன்ற பிரச்சி னைகளில் அவையில் பேசும்போது, தொடர்புடைய உறுப்பினர்களின் பெயரை தவிர்க்க வேண்டும்” என்றார்.