

சிபிஐ இடைக்கால இயக்குநராக குஜராத் மாநில பிரிவு ஐபிஎஸ் அதிகாரியான ராகேஷ் அஸ்தானா நியமிக்கப்பட்டுள்ளார். இவரது நியமனம் சர்ச்சைக்குள்ளாகி உள்ளது.
சிபிஐ இயக்குநராக இருந்த அனில் சின்ஹா நேற்று முன்தினம் ஓய்வு பெற்றார். இவரது பதவிக்கு, பல்வேறு மாநிலங்களில் இருந்து அதிக எண்ணிக்கையிலான அதிகாரிகள் முயன்று வந்தனர். 1980-ம் ஆண்டு பேட்ச், தமிழ்நாடு பிரிவின் ஐபிஎஸ் அதிகாரியான அர்ச்சனா ராமசுந்தரம், சிபிஐயின் முதல் பெண் இயக்குநராக நியமிக்கப்படும் வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது. ஆயுத எல்லைப் படையின் (சஷாஸ்திரா சீமா பல் எஸ்எஸ்பி) தலைமை இயக்குநரான அர்ச்சனா, ஏற்கெனவே சிபிஐ இணை இயக்குநராகப் பணியாற்றியவர். இது குறித்த விரிவான செய்தி ‘தி இந்து’வில் கடந்த அக்டோபர் 29-ல் வெளியாகி இருந்தது.
அனில் சின்ஹாவின் பதவி அவருக்கு அடுத்த நிலையில் சிபிஐ சிறப்பு இயக்குநராக இருந்த ரூபக் குமார் தத்தாவுக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சில வாரங்கள் முன்பு தத்தா திடீரென மத்திய உள்துறை அமைச்சக சிறப்பு செயலாளராக மாற்றப்பட்டார். இதனால் மூன்றாம் இடத்தில் இருந்த ராகேஷ் அஸ்தானா இரண்டாம் இடத்துக்கு வந்தார். இந்நிலையில் அஸ்தானா தற்போது சிபிஐ இடைக்கால இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
1984-ம் ஆண்டு பேட்ச், குஜராத் மாநில பிரிவு ஐபிஎஸ் அதிகாரியான அஸ்தானா, பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தேசிய தலைவர் அமித்ஷா ஆகியோருக்கு மிகவும் நெருக்கமானவராகக் கருதப்படுகிறார். மிகவும் திறமை பெற்றவரான இவர், கடந்த 2002-ல் குஜராத் மதக் கலவரத்திற்கு காரணமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தின் விசாரணை அதிகாரியாக இருந்தவர். இவர் கடந்த ஏப்ரல் மாதம் மத்திய அரசால் சிபிஐயில் நியமிக்கப்பட்டிருந்தார். இவரது நியமனத்தால், பிரதமர் தனது மாநிலத்தை சேர்ந்தவர்களை மத்திய அரசுப் பணியில் நியமிப்பதில் அதிக ஆர்வம் காட்டுவதாக சிபிஐ அதிகாரிகள் மத்தியில் சர்ச்சை கிளப்பியுள்ளது.
இது குறித்து ‘தி இந்து’விடம் சிபிஐயின் அதிகாரிகள் வட்டாரம் கூறும்போது, “இதற்கு முன் ஒய்.சி.மோதி, அருண்குமார் சர்மா ஆகிய இரு குஜராத் அதிகாரிகள் தற்போதைய அரசால் சிபிஐயில் நியமிக்கப்பட்டதும் சர்ச்சைக்குள் ளானது. இதில் ஒய்.சி.மோதி குஜராத் மதக் கலவரத்தின்போது முதல்வராக இருந்த நரேந்திர மோடி மீது விசாரணை நடத்திய சிறப்பு புலனாய்வுக் குழுவில் பணியாற்றியவர். இஸ்ரத் ஜஹான் என்கவுன்ட்டர் வழக்கு, குஜராத் இளம்பெண் பின் தொடரப்பட்ட வழக்கு ஆகியவற்றின் விசாரணை அதிகாரியாக அருண்குமார் சர்மா இருந்துள்ளார். அஸ்தானாவுடன் சேர்த்து பிரதமர் நியமித்த குஜராத்திகளின் எண்ணிக்கை 20-ஐ தாண்டியுள்ளது. அமைச்சர்களை விட இவர்களை பிரதமர் அதிகம் நம்புகிறார்” என்று தெரிவித்தனர்.
நாட்டின் முக்கிய விசாரணை அமைப்பான சிபிஐக்கு புதிய இயக்குநரை தேர்ந்தெடுக்கும் பணியை, மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித்துறை கடந்த ஜூலையில் தொடங்கியது. இத்துறை சார்பில் தகுதிவாய்ந்த 40 பேர் கொண்ட பட்டியல், மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையர் (சிவிசி) அலுவலக ஒப்புதலுக்கும் அனுப்பி வைக்கப்பட்டது. இங் கிருந்து அப்பட்டியல், பிரதமர், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோரைக் கொண்ட கொலீஜி யத்துக்கு செல்லும். இந்நிலையில் கொலீஜியம் கூடாததால், 2-வது இடத்தில் இருந்த ராகேஷ் அஸ்தானா, சிபிஐ இடைக்கால இயக்குநராக நியமிக்கப்பட்டுள் ளார். இவரது நியமன உத்தரவு, இறுதி முடிவை எடுக்கும் அதிகாரம் பெற்ற பிரதமர் தலைமையிலான அமைச்சரவை பணிநியமனக் குழுவால் பிறப்பிக்கப்பட்டுள்ளது.