

மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் புகழ் என்றும் அழியாது என பெங்களூருவில் நடை பெற்ற இரங்கல் கூட்டத்தில் கர்நாடக அமைச்சர் ரோஷன் பெய்க் தெரிவித்தார்.
கர்நாடக மாநில அதிமுக சார்பில் மறைந்த ஜெயலலிதாவுக்கு பெங்களூரு தமிழ்ச்சங்கத்தில் நேற்று மாலை இரங்கல் கூட்டம் நடைபெற்றது. இதில் கர்நாடக செய்தி மற்றும் தகவல் தொடர்புத் துறை அமைச்சர் ரோஷன் பெய்க், சட்டப்பேரவை உறுப்பினர் ஹாரீஷ், சட்ட மேலவை உறுப்பினர் ரிஸ்வான், கர்நாடக மாநில விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்த கோடிஹள்ளி சந்திரசேகர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் கர்நாடக அமைச்சர் ரோஷன் பெய்க் ஜெயலலிதாவின் உருவ படத்தைத் திறந்து வைத்து, மலர்தூவி மரியாதை செலுத்தார். பின்னர் அவர் கூறும்போது, “ஜெயலலிதா பல்வேறு நலத் திட்டங்களை செயல்படுத்தி மக்களிடையே நல்ல பெயரை பெற்றார். அரசியல் ரீதியாக வேறு கட்சி, வேறு மாநிலத்தில் இருந்தாலும் ஜெயலலிதா வின் ஆளுமையை கண்டு வியந்தேன். கர்நாடகாவில் பிறந்து தமிழகத்தை சிறப்பாக ஆண்ட அவரது புகழ் என்றும் அழியாது. காலம் முழுவதும் வரலாற்றில் அவரது பெயர் நிலைத்து நிற்கும். ஜெயலலிதாவின் இழப்பால் வாடும் தமிழக மக்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்றார்.
இதைத் தொடர்ந்து கர்நாடக மாநில அதிமுக செயலாளர் புகழேந்தி பேசும்போது, “தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவால் கோடிக்கணக்கான அதிமுக தொண்டர் களும், தமிழக மக்களும் மிகவும் வேதனை அடைந்துள்ளனர். அவரது மறைவால் என்னைப் போன்ற தலைவர்களும் என்ன செய்வது என்றே தெரியாமல் தவிக்கின்றனர்.
ஒரு தாயைப் போல தமிழக மக்களின் தேவையை அறிந்து அதை நிறைவேற்றினார். அம்மா உணவகம், அம்மா உப்பு, அம்மா குடிநீர், மாணவர்களுக்கு லேப்டாப், தாலிக்கு தங்கம் போன்ற திட்டங்களை தமிழக மக்கள் மறக்கமாட்டார்கள்” என்றார்.
இதில் பங்கேற்ற அனைவரும் கன்னடத்தில் உரையாற்றியதால் அங்கு குவிந்திருந்த நூற்றுக்கும் மேற்பட்ட தமிழர்கள், எளிதில் புரிந்துகொள்ள முடியாமல் சிரமப்பட்டனர்.