

தகவல் அறியும் உரிமை (ஆர்டிஐ) சட்டத்தின் கீழ், பண மதிப்பு நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதற்கான காரணம் என்ன என்பதை தெரிவிக்க முடியாது என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
சமூக ஆர்வலரான வெங்கடேஷ் நாயக், ஆர்டிஐ சட்டத்தின் கீழ் ரிசர்வ் வங்கிக்கு ஒரு மனு அனுப்பினார். அதில், “திடீரென பண மதிப்பு நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதற்கான காரணம் என்ன? இதனால் ஏற்பட்ட பணத் தட்டுப்பாடு பிரச்சினை எப்போது தீரும்?” என்பன உள்ளிட்ட கேள்விகளை கேட்டிருந்தார்.
இதற்கு ஆர்பிஐ அளித்த பதிலில், “ஆர்டிஐ சட்டத்தின் பிரிவு 8(1)(ஏ)-ன் கீழ் (நாட்டின் இறையாண்மை, பாதுகாப்பு, ஒருமைப்பாட்டை பாதிக்கும் தகவலை தெரிவிக்க தேவையில்லை) பண மதிப்பு நீக்கத்துக்கான காரணத்தை தெரிவிக்க இயலாது. மேலும் பணத் தட்டுப்பாடு எப்போது தீரும் என்பது பற்றியும் தகவல் தர இயலாது. ஏனெனில், ஆர்டிஐ சட்டப் பிரிவு 2(எப்)-ன்படி எதிர்கால நிகழ்வுகளை தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை” என கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து முன்னாள் தகவல் ஆணையர் ஷைலேஷ் காந்தி கூறும்போது, “பண மதிப்பு நீக்க நடவடிக்கை என்பது ஏற்கெனவே அமல்படுத்தப்பட்டுவிட்டது. இந்நிலையில், ஆர்டிஐ சட்டத்தில் விதிவிலக்காக குறிப்பிடப்பட்டுள்ள அந்தப் பிரிவு இதற்கு எப்படி பொருந்தும் என தெரியவில்லை” என்றார்.
இதனிடையே, இதுகுறித்து மேல் முறையீடு செய்யப்போவதாக மனுதாரர் நாயக் தெரிவித்துள்ளார். மேலும், இந்த விவகாரத்தில் ஆர்பிஐ மீது மத்திய தகவல் ஆணையத்தில் ஷைலேஷ் காந்தி புகார் செய்துள்ளார்.
பண மதிப்பு நீக்க நடவடிக்கை தொடர்பாக ஆர்பிஐ இயக்குநர்கள் வாரிய கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை வெளியிட வேண்டும் என்ற நாயக்கின் கோரிக்கை ஏற்கெனவே நிராகரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.