Last Updated : 14 Dec, 2016 12:30 PM

 

Published : 14 Dec 2016 12:30 PM
Last Updated : 14 Dec 2016 12:30 PM

போதைப் பழக்கத்துக்கு பள்ளிக் குழந்தைகள் அடிமையாவதை தடுக்க செயல்திட்டம்: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் வலியுறுத்தல்

பள்ளிக் குழந்தைகள் மத்தியில் பெருகிவரும் போதைப் பழக்கத்தை கட்டுப்படுத்த தேசிய அளவிலான செயல்திட்டத்தை வகுக்குமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.

நோபல் பரிசு வென்ற கைலாஷ் சத்யார்த்தி அவரது 'பச்பன் பச்சாவோ அந்தோலன்' தன்னார்வ தொண்டு நிறுவனம் சார்பில் கடந்த 2014-ம் ஆண்டு தாக்கல் செய்த பொதுநல மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

கைலாஷ் சத்யார்த்தி தாக்கல் செய்திருந்த மனுவில், "பள்ளிக் குழந்தைகள் மத்தியில் பெருகிவரும் போதை பழக்கத்தை தடுக்கும் வகையில் தேசிய அளவிலான செயற் திட்டம் வகுக்கப்பட வேண்டும். பள்ளிப் பாடத்திட்டத்தில் போதை விழிப்புணர்வு பாடமும் சேர்க்க வேண்டும்" என வலியுறுத்தப்பட்டிருந்தது.

இந்த வழக்கை இன்று (செவ்வாய்க்கிழமை) விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.எஸ்.தாகூர், டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு, "பள்ளிக் குழந்தைகள் போதைப் பழக்கத்துக்கு ஆளாகினால் அவர்கள் எளிதில் போதைப் பொருள் விற்பனையாளர்களாகவும் ஆக்கப்பட்டுவிடுகிறார்கள்.

பள்ளிக் குழந்தைகள் மத்தியில் போதைப் பழக்கம் அதிகரிப்பதை தடுக்கும் வகையில் தேசிய அளவிலான செயற்திட்டம் ஒன்றை அடுத்த 6 மாதங்களுக்குள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்.

அதேபோல், போதைப் பொருட்களின் பயன்பாட்டால் ஏற்படும் தாக்கம் குறித்தும் மோசமான உடல் மற்றும் மனநல பாதிப்புகள் குறித்தும் எடுத்துரைக்கும் வகையில் பள்ளிகளில் பாடத்திட்டத்தை வடிவமைப்பது குறித்து பரிசீலிக்க வேண்டும்" என உத்தரவிட்டது.

பொதுநல வழக்கை தாக்கல் செய்த தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் சார்பாக வாதாடிய வழக்கறிஞர் ஹெ.எஸ்.பூல்கா, "நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களில் இருக்கும் போதை மீட்பு மற்றும் மறுவாழ்வு மையங்களில் குழந்தைகளுக்கென தனியாக சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட வேண்டும்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x