ஊழல் வழக்கில் கைதான அமைச்சருக்கு திஹார் சிறையில் மசாஜ் சென்டர் தொடங்கியுள்ளது ஆம் ஆத்மி கட்சி: பாஜக தலைவர் நட்டா சரமாரி புகார்

ஜே.பி.நட்டா | கோப்புப்படம்
ஜே.பி.நட்டா | கோப்புப்படம்
Updated on
1 min read

புது டெல்லி: ‘‘திஹார் சிறையில் தனது அமைச்சருக்காக, ஆம் ஆத்மி கட்சி மசாஜ் சென்ட்டரை திறந்து வைத்துள்ளது’’ என்று பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா புகார் தெரிவித்தார்.

டெல்லி மாநகராட்சிக்கு டிசம்பர் 4-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பாஜக தலைவர் ஜே.பி.நட்டா மற்றும் கட்சி எம்.பி. ஹர்ஷ்வர்தன் ஆகியோர் தொழிற்சாலைகள் நிறைந்த வசீர்பூர் பகுதியில் நேற்று பிரச்சாரம் செய்தனர். அப்போது நட்டா பேசியதாவது:

ஊழலுக்கு எதிரான கட்சி என்று ஆம் ஆத்மி கூறிக் கொள்கிறது. ஆனால், ஊழல் வழக்கில் அந்தக் கட்சியின் அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்காக சிறையிலேயே மசாஜ் சென்ட்டர் ஒன்றை ஆம் ஆத்மி திறந்துள்ளது.

அங்கு பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டவர் ‘தெரபிஸ்ட்டாக’ செயல்படுகிறார். டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சியை பார்த்து மக்கள் மிகவும் நொந்து போய் உள்ளனர். மாநகராட்சித் தேர்தலில் பாஜக.வுக்கு வாக்களிப்பதற்காக மக்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.

சிறையில் ஆம் ஆத்மி அமைச்சர் சத்யேந்தர் ஜெயினுக்கு அளிக்கப்படும் வசதிகள், அவர் சிறையில் பலரை சந்திப்பது, ஓட்டல்களில் இருந்து உணவு வரவழைத்து பரிமாறுவது போன்ற வீடியோக்கள் வெளியாகி உள்ளன. சிறையில் அவர் அடைக்கப்பட்டுள்ள அறையை ஒருவர் சுத்தப்படுத்துவதும், அவருக்காக படுக்கை ஏற்பாடு செய்யும் காட்சிகள் அடங்கிய வீடியோவும் வெளியாகி உள்ளது. இப்படிப்பட்ட அமைச்சர்களைதான் ஆம் ஆத்மி வைத்துள்ளது.

ஆனால், பிரதமர் மோடியின் செயல்பாடுகளை மக்கள் நன்கு பார்த்து வருகின்றனர். அவருடைய சிறந்த பணிகளை பார்த்து, பாஜக.வுக்கு வாக்களிக்க டெல்லி மக்கள் ஆர்வமாக உள்ளனர். இவ்வாறு பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா பேசினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in