Last Updated : 28 Dec, 2016 12:11 PM

 

Published : 28 Dec 2016 12:11 PM
Last Updated : 28 Dec 2016 12:11 PM

கான்பூர் அருகே அஜ்மீர்-சீல்டா எக்ஸ்பிரஸ் விபத்து: ரயில் தடம்புரண்டு 2 பேர் பலி, 62 பேர் காயம்

கான்பூர் அருகே அஜ்மீர்-சீல்டா எக்ஸ்பிரஸ் ரயிலின், 15 பெட்டிகள் தடம் புரண்டதில், 60-க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனர்.

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் இருந்து 70 கிமீ தொலைவில் உள்ள ரூரா ரயில் நிலையம் அருகே கால்வாய் பாலம் ஒன்றைக் கடந்தபோது நேற்று காலை 5.30 மணிக்கு இவ்விபத்து நிகழ்ந்ததாக, வடக்கு மத்திய ரயில்வே பிஆர்ஓ அமித் மால்வியா தெரிவித்தார்.

அஜ்மீரில் இருந்து கொல்கத்தாவின் சீல்டா ரயில் நிலையம் நோக்கிச் சென்ற எக்ஸ்பிரஸ் ரயில் விபத்துக்கு உள்ளானதில், 15 பெட்டிகள் தடம் புரண்டு பலர் படுகாயம் அடைந்ததாகவும், அவர்களில் 2 பேர் இறந்துவிட்டதாகவும், கான்பூர் சரக ஐஜி ஜகி அகமது தெரிவித்தார்.

கான்பூர் தலைமை மருத்துவ அலுவலர் ராமாயன் பிரசாத் கூறும்போது, ‘விபத்தில் காயமடைந்த 42 பயணிகள் கான்பூர் மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். பலத்த காயமடைந்த மற்ற பயணிகள், ஹேல்லட் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்’ என்றார்.

தடம்புரண்ட ரயில் பெட்டிகளில் இருந்து அனைத்து பயணிகளும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு, மீட்புப் பணிகள் நிறைவு பெற்றுவிட்டன. விபத்துக்கான காரணம் உடனடியாக தெரிய வரவில்லை. விபத்தில் காயமடைந்த பயணிகளுக்கு வேண்டிய அனைத்து உதவிகளும் வழங்கப்பட்டு வருவதாகவும், ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு அறிவித்துள்ளார்.

விபத்துக்குள்ளான ரயிலில் பயணிகள் தங்கள் பயணத்தைத் தொடர்ந்து மேற்கொள்ள மாற்று ஏற்பாடுகள் செய்யப்படுவதோடு, காயமடைந்தவர்களுக்கு நிவாரண நிதியுதவியும் வழங்கப்படும் என ட்விட்டர் மூலம் வெளியிட்ட தகவலில் அமைச்சர் சுரேஷ் பிரபு குறிப்பிட்டார்.

இதற்கிடையே, விபத்தில் பலத்த காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும், லேசான காயமடைந்தவர்களுக்கு ரூ.25 ஆயிரமும் நிவாரண உதவி வழங்கப்படுமென, மாநில முதல்வர் அகிலேஷ் யாதவ் அறிவித்துள்ளார்.இப்பகுதியில் கடந்த 2 மாத காலத்தில் 2-வது முறையாக நேற்று ரயில் விபத்து நிகழ்ந்துள்ளது. கான்பூர் ஊரக மாவட்டத்தில் கடந்த நவம்பர் 20-ம் தேதி இந்தூர்-பாட்னா எக்ஸ்பிரஸ் ரயில் தடம்புரண்டு 150 பயணிகள் பலியானது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x