உயர் நீதிமன்றங்களில் நியமிக்கப்படும் முன்னாள் நீதிபதிகளை தண்டிக்க எந்த விதிகளும் வகுக்கப்படவில்லை

உயர் நீதிமன்றங்களில் நியமிக்கப்படும் முன்னாள் நீதிபதிகளை தண்டிக்க எந்த விதிகளும் வகுக்கப்படவில்லை
Updated on
1 min read

அதிகரித்து வரும் நிலுவை வழக்குகளை பைசல் செய்வதற்காக நாடு முழுவதும் உள்ள உயர் நீதிமன்றங்களில் ஓய்வு பெற்ற நீதிபதிகளை நியமிக்க ஒப்புதல் தெரிவிக்கப்பட்ட நிலையில், அவர்களுக்கு எதிராக எழும் முறைகேடு புகார்களை விசாரிக்க எந்த விதிகளும் வகுக்கப்படவில்லை என மத்திய சட்ட அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதனால் நியமன விவகாரத்தில் குழப்பம் நீடிக்கிறது.

கடந்த ஏப்ரல் மாதம் தலைமை நீதிபதிகள் மற்றும் மாநில முதல்வர்களின் கருத்தரங்கு நடந்தது. இதில் நாடு முழுவதும் நீதிமன்றங்களில் தேங்கி கிடக்கும் வழக்குகளை விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதிகளை மீண்டும் பணியில் அமர்த்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. எனினும் ஆறு மாதங்களுக்குப் பின் கடந்த அக்டோபர் மாதம் தான் இதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.

உயர் நீதிமன்றங்களில் நீதிபதிகளாக பதவி வகித்து ஓய்வு பெற்றவர்களை ஒருங்கிணைப்பு, தகுதி மற்றும் செயல்பாட்டின் அடிப்படையில் மீண்டும் உயர் நீதிமன்ற நீதிபதிகளாக பணியில் அமர்த்தி தற்போது நிலவும் அசாதாரண சூழலை சமாளிக்க அரசமைப்பு சட்டம் 224 ஏ வழிவகுக்கிறது. அதன் அடிப்படையில் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சம்பந்தப்பட்ட மாநிலத்தில் காலியாக உள்ள நீதிபதி பதவிக்கு ஓய்வு பெற்ற நீதிபதியை குடியரசுத் தலைவரின் சம்மதத்துடன் பணியில் அமர்த்த முடியும்.

இந்த சூழலில் நாடாளுமன்ற நிலுவை குழுவிடம் மத்திய சட்ட அமைச்சகம் இதற்கு முரண்பாடான தகவலை முன் வைத்துள்ளது. அதாவது பதவியில் இருக்கும் நீதிபதி தவறு செய்தால், அவரை பதவியில் இருந்து அகற்றி நடவடிக்கை எடுக்க வழி இருக்கிறது. ஆனால் நியமிக்கப்படும் ஓய்வு பெற்ற நீதிபதிகளில் யாரேனும் முறைகேடுகளில் ஈடுபட்டால் அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு விதிகள் ஏதும் இல்லை. எனவே இந்த விவகாரத்தில் சற்று சிக்கல் ஏற்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் ஓய்வு பெற்ற நீதிபதிகளை மீண்டும் பதவியில் அமர்த்துவதன் மூலம் நாடு முழுவதும் தேங்கி கிடக்கும் 3 கோடி வழக்குகளை தீர்க்க முடியும் என்றும் குறிப்பாக 5 ஆண்டுகளுக்கு மேல் பைசல் செய்யாமல் இருக்கும் வழக்குகள் விரைந்து முடிவதற்கு வாய்ப்பு ஏற்படும் என்றும் கூறப்படுகிறது.

நாடு முழுவதும் உள்ள 24 உயர் நீதிமன்றங்களில் 450 நீதிபதிகள் பதவிகள் நிரப்பப்படாமல் உள்ளன. அவற்றில் ஆந்திரா, மத்தியப் பிரதேசம், அலகாபாத், கொல்கத்தா ஆகிய 4 மாநில உயர் நீதிமன்றங்களுக்கு 18 முன்னாள் நீதிபதிகளை நியமிக்குமாறு அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in