

உத்தரப் பிரதேச மாநிலம், புலந்த்ஷாகர் நகரில் வங்கி முன் வரிசையில் காத்திருந்தவர்கள் மத்தியில் அடிதடி ஏற்பட்டது. இதையடுத்து போலீஸார் வானத்தை நோக்கி துப்பாக்கி யால் சுட்டு அமைதி ஏற்படுத்தினர்.
பணமதிப்பு நீக்க அறிவிப்புக்குப் பிறகு புதிய ரூபாய் நோட்டுகளை பெற நாடு முழுவதும் பொதுமக்கள் பல மணி நேரம் வங்கி மற்றும் ஏடிஎம்களில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனினும் பணம் கிடைக்காமல் மக்கள் தவிக்கின்றனர்.
இந்நிலையில் உ.பி.புலந்த்ஷாகர் நகரின் ஆஹர் என்ற இடத்தில் பஞ்சாப் நேஷனல் வங்கிக் கிளை உள்ளது. இங்கு வாடிக்கையாளர்கள் நேற்று பணம் எடுப்பதற்காக நீண்ட வரிசையில் காத்திருந்தனர். அப்போது, சாந்தி என்ற பெண் இடையில் புகுந்திட முயன்றார். இதற்கு வரிசையில் நின்ற சிலர் எதிர்ப்பு தெரிவித்து கண்டித்தனர். இதையடுத்து அந்தப் பெண் 5 இளைஞர்களை வங்கிக்கு அழைத்து வந்தார். அவர்கள் சாந்தியை கண்டித்தவர்களை தாக்கத் தொடங்கினர். இதை யடுத்து அங்கு மோதல் ஏற்பட்டது. அப்போது அங்கு பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீஸார் வானத்தை நோக்கி பலமுறை துப்பாக்கியால் சுட்டு, மோதலில் ஈடுபட்டவர்களை விரட்டினர்.