வங்கி வரிசையில் வாடிய மேலும் ஒருவர் உயிரிழப்பு

வங்கி வரிசையில் வாடிய மேலும் ஒருவர் உயிரிழப்பு
Updated on
1 min read

உத்தரப் பிரதேசத்தின் முசாஃபர்நகரில் வங்கியில் பணம் எடுப்பதற்காக வரிசையில் நின்றுகொண்டிருந்த ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்தார். இனாம் அகமது என்ற அவரது வயது 50.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறும்போது, 'காசநோயால் பாதிக்கப்பட்ட இனாம் அகமது நேற்று ஷாமிலி மாவட்டத்தில் உள்ள வங்கி ஒன்றில் வரிசையில் நின்றுகொண்டிருந்தார்.

பணம் எடுப்பதற்காக காத்திருந்த அவர் திடீரென மயங்கி விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்' என தெரிவித்தனர்.

அவரது நோய்வாய்ப்பட்ட மனைவி ரபியா பேகம் கூறும்போது, தனது கணவர் அருகில் உள்ள ஆரம்ப சுகாதார மையத்தில் சிகிச்சை பெற்றுவந்ததாக தெரிவித்தார்.

சமீப காலமாகவே, வங்கி மற்றும் ஏடிஎம்களில் நீண்ட வரிசையில் நிற்கும்போது வயதானவர்கள் உயிரிழக்கும் சம்பவம் அதிகரித்துள்ளது.

ரூபாய் நோட்டு நடவடிக்கையின் எதிரொலியாக, இதுவரை நாடு முழுவதும் 100-க்கும் மேற்பட்டோர் பலியானதாக, நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருவது கவனிக்கத்தக்கது.

பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு அறிவித்து ஒரு மாதம் நிறைவாகியுள்ள நிலையிலும் வங்கி, ஏடிஎம்களில் பணத் தட்டுபாடு தீரவில்லை. இதனால், நாடு தழுவிய அளவில் பொதுமக்கள் அவதிப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in