Published : 27 Nov 2022 07:50 AM
Last Updated : 27 Nov 2022 07:50 AM
புதுடெல்லி: தனிநபர்கள், அமைப்புகள், நிறுவனங்கள் தங்கள் கடமையை செவ்வனே செய்ய வேண்டும். அப்போதுதான் நாட்டை வளர்ச்சியின் புதிய உச்சத்துக்கு கொண்டு செல்ல முடியும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் நேற்று இந்திய அரசியல் சாசன தினம் கொண்டாடப்பட்டது. உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற விழாவில் பிரதமர் மோடி பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:
நவீன இந்தியா குறித்து கனவு கண்ட அம்பேத்கரையும் அவரோடு இணைந்து அரசியல் சாசனத்தை வரையறுத்த அனைவருக்கும் மரியாதை செலுத்துகிறேன். மும்பை தீவிரவாத தாக்குதலின் நினைவு நாளையும் இன்றுஅனுசரிக்கிறோம். இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கும் அஞ்சலி செலுத்துகிறேன்.
ஒட்டுமொத்த உலகத்தின் பார்வையும் இப்போது இந்தியாவின் மீது பதிந்துள்ளது. நமது அதிவேக பொருளாதார வளர்ச்சி உலகின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. பெரும்பாலான உலக நாடுகள் இந்தியாவை நம்பிக்கையோடு, எதிர்பார்ப்போடு பார்க்கின்றன.
சுதந்திரத்துக்குப் பிறகு இந்தியா உடைந்துவிடும் என்று சிலர் விமர்சித்தனர். அந்த விமர்சனங்களை உடைத்து வேற்றுமையில் ஒற்றுமை, பன்முகத்தன்மையுடன் இந்தியா அதிவேகமாக முன்னேறி செல்கிறது. இதற்கு நமது அரசியல் சாசனம் அஸ்திவாரமாக அமைந்துள்ளது. மக்களை மகிழ்ச்சியாக வைத்திருக்க வேண்டும். உண்மையும் எளிமையும் அரசின் மந்திரங்களாக இருக்க வேண்டும் என்று மகாபாரதத்தில் கூறப்பட்டு இருக்கிறது. இதையே நமது அரசியல் சாசனம் பிரதிபலிக்கிறது.
அரசியல் சாசன முகப்புரையின் தொடக்கத்தில் எழுதப்பட்டிருக்கும் "நாம் இந்திய மக்கள்" என்றவார்த்தைகள் வெறும் வார்த்தைகள் அல்ல. அழைப்பு, உறுதிமொழி, நம்பிக்கையை அவைவெளிப்படுத்துகின்றன. இதன்காரணமாகவே உலக ஜனநாயகத்தின் தாயாக இந்தியா விளங்குகிறது. சாமானிய மக்களுக்காக சட்டங்கள் எளிமையாக்கப்பட்டுவருகின்றன. மக்களுக்கு எளிதில்,விரைந்து நீதி கிடைக்க அர்த்தமுள்ள நடவடிக்கைகளை நீதித் துறை எடுத்து வருகிறது.
தனிநபர்கள், அமைப்புகள், நிறுவனங்கள் தங்கள் கடமையை செவ்வனே செய்ய வேண்டும். அப்போதுதான் வளர்ச்சியின் புதியஉச்சத்துக்கு இந்தியாவை கொண்டுசெல்ல முடியும்.
இந்திய அரசியல் சாசன நிர்ணயசபையில் 15 பெண் உறுப்பினர்கள் இருந்தனர். அவர்களில் ஒருவர் கேரளாவை சேர்ந்த தாட்சாயிணி வேலாயுதன். தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த அவரது பங்களிப்புகளை நினைவுகூர்ந்து கவுரப்படுத்தவேண்டும். அவர் மட்டுமன்றி துர்காபாய் தேஷ்முக், ஹன்சா மேத்தா,ராஜ்குமாரி அம்ரித் கவுர் உள்ளிட்ட பெண்களும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ளனர். இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியின்போது நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளின் விவரங்களை தெரிவிக்கும் ‘விர்ச்சுவல் ஜஸ்டிஸ் க்ளாக்', நீதிமன்ற மேலாண்மையை விளக்கும் ‘ஜஸ்டிஸ் மொபைல் செயலி 2.0’,டிஜிட்டல் நீதிமன்றம் ஆகியவற்றை யும் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT