Published : 27 Nov 2022 07:46 AM
Last Updated : 27 Nov 2022 07:46 AM
சபரிமலை: சபரிமலை சன்னிதானத்தில் செயல்படும் ஆயுர்வேத மருத்துவமனை, உடல்நலக்குறைவால் பாதிக்கப்படும் பக்தர்களுக்கு சேவையாற்றி வருகிறது.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் பக்தர்களின் உடல்நல பாதிப்பு பிரச்சினைகளுக்கு தீர்வு காணவிரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நிலக்கல்லில் அமைந்துள்ள ஆரம்ப சுகாதார நிலையம்ஆண்டு முழுவதும் செயல்படுகிறது. பம்பை, சந்திதானம் பகுதிகளில் நவீன வசதிகளுடன்கூடிய மருத்துவமனைகள் செயல்படுகின்றன. பம்பை முதல் சன்னிதானம் வரையிலான பாதையில் அவசர உதவி மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. மலையேறும்போது உடல்நலக் குறைவால் பாதிக்கப்படும் பக்தர்களுக்கு இந்த மருத்துவமனைகள், மையங்களில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. மேல்சிகிச்சை தேவைப்படுவோர் கோட்டயம் அல்லது திருவனந்தபுரம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.
சபரிமலை சன்னிதானத்தில் அரசு மருத்துவமனை, இதயநோய் சிகிச்சை மையம், ஆயுர்வேத மருத்துவமனை, என்எஸ்எஸ் மருத்துவமனை ஆகிய 4 மருத்துவமனைகள் செயல்படுகின்றன. இதில் ஆயுர்வேத மருத்துவமனை பக்தர்களின் விருப்ப தேர்வாக உள்ளது. இந்தமருத்துவமனையில் அனுபவமிக்க ஆயுர்வேத மருத்துவர்களும் ஊழியர்களும் பணியில் உள்ளனர். பக்தர்களின் உடல்நிலை பாதிப்புகளுக்கு ஏற்ப மருந்துகள் வழங்கப்படுகின்றன. பக்க விளைவுகள் இல்லாத மருத்துவ கிசிச்சை என்பதால் ஆயுர்வேத மருத்துவமனையில் பக்தர்களின் கூட்டம் அலைமோதுகிறது.
இதுகுறித்து அங்கு பணியாற்றும் ஆயுர்வேத மருத்துவர் ஒருவர் கூறியதாவது: கேரளாவின் பாரம்பரிய மருத்துவ முறைகளில் ஆயுர்வேதம் மிகவும் பிரபலமானது. கேரளா மட்டுமன்றி உலகம்முழுவதும் ஆயுர்வேத மருத்துவ சிகிச்சையை கொண்டு சென்றுள்ளோம்.
சபரிமலையை பொறுத்தவரை மலையேறும்போது பக்தர்களுக்குசுவாசப் பிரச்சினைகள் ஏற்படுகின்றன. எங்களது மருத்துவமனையில் அவர்களுக்கான ஆயுர்வேத மருந்துகளை வழங்குகிறோம். எளிமையான மூச்சுப் பயிற்சியை கற்றுக் கொடுக்கிறோம். வீடுகளுக்கு சென்ற பிறகும் அவர்கள் மூச்சுப் பயிற்சியை தொடரலாம்.
மேலும் உடலின் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யும் மூலிகை திரவத்தை பக்தர்களுக்கு அளிக்கிறோம். இது பக்தர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. சன்னிதானம் மட்டுமன்றி பம்பையிலும் ஆயுர்வேத மருத்துவமனை செயல்படுகிறது. அந்த மருத்துவமனையிலும் அதிக எண்ணிக்கையில் பக்தர்கள் சிகிச்சை பெற்று செல்கின்றனர். ஆயுர்வேத மருத்துவமனைகளில் உள்நோயாளிகள் பிரிவு கிடையாது. பக்தர்களுக்கு தேவையான மருந்துகள், ஆலோசனைகளை வழங்குகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT