Published : 27 Nov 2022 07:08 AM
Last Updated : 27 Nov 2022 07:08 AM

குஜராத் | கல்லூரி மாணவிகளுக்கு இலவச மின்சார ஸ்கூட்டர்; 20 லட்சம் பேருக்கு வேலை - பாஜக தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி

காந்திநகர்: குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலை யொட்டி பாஜக சார்பில் நேற்று தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது.

குஜராத்தில் டிசம்பர் 1, 5 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. அந்த மாநிலத்தில் ஆளும் பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி இடையே மும்முனை போட்டி நிலவுகிறது. மாநிலத்தில் 7-வது முறையாக ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள பாஜக தீவிர பிரச்சாரம் செய்து வருகிறது. இந்த சூழலில் பாஜக சார்பில் தலைநகர் காந்திநகரில் நேற்று தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது.

பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, குஜராத் முதல்வர் பூபேந்திர படேல், மாநில கட்சித் தலைவர் சி.ஆர்.பாட்டீல் ஆகியோர் அறிக்கையை வெளியிட்டனர். அதில் கூறியிருப்பதாவது: குஜராத்தில் அடுத்த 5 ஆண்டுகளில் 20 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படும். அரசு துறைகளில் ஒரு லட்சம் பெண்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும். வேளாண் உட்கட்டமைப்புக்காக ரூ.10,000 கோடி ஒதுக்கப்படும். நீர்பாசன திட்டங்களுக்காக ரூ.25,000 கோடி செலவிடப்படும்.

தெற்கு குஜராத், சவுராஷ்டிரா பகுதிகளில் 2 கடல் உணவு பூங்காக்கள் உருவாக்கப்படும். கோசாலை திட்டத்துக்கு பட்ஜெட்டில் கூடுதலாக ரூ.500 கோடி ஒதுக்கப்படும். கால்நடைகளின் சிகிச்சைக்காக கூடுதலாக 1,000 நடமாடும் மருத்துவக் குழுக்கள் அமைக்கப்படும்.

மாநிலத்தில் பொது சிவில் சட்டம் அமல் செய்யப்படும். பொதுசொத்துகளை சேதப்படுத்துவோரிடம் இருந்து இழப்பீடு பெறவகை செய்யும் சட்ட மசோதாநிறைவேற்றப்படும். திரைமறைவில் இருக்கும் தீவிரவாத அமைப்புகள், தீவிரவாதிகளை கண்டறிய புதிய பிரிவு தொடங்கப்படும்.

பள்ளிப்படிப்பு முதல் முதுகலை வரை மாணவிகளுக்கு இலவச கல்வி திட்டம் செயல்படுத்தப்படும். ஏழை குடும்பங்களைச் சேர்ந்த கல்லூரி மாணவிகளுக்கு இலவசமாக மின்சார ஸ்கூட்டர் வழங்கப்படும். ஏழை குடும்பங்களைச் சேர்ந்த 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்புவரையிலான பள்ளி மாணவிகளுக்கு இலவசமாக சைக்கிள் வழங்கப்படும்.

பெண்களுக்காக ஆண்டு தோறும் 2 சமையல் காஸ் சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும். பொது விநியோக திட்டத்தில் மாதத்துக்கு ஒரு கிலோ பருப்பு, ஆண்டுக்கு 4 முறை ஒரு கிலோசமையல் எண்ணெய் வழங்கப்படும். ஆயுஷ்மான் பாரத் காப்பீடு திட்ட வரம்பு ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.10 லட்சமாக உயர்த்தப்படும். கோயில்களை புதுப்பிக்க ரூ.1,000 கோடி ஒதுக்கப்படும்.

மாநிலம் முழுவதும் 100 இடங்களில் அன்னபூர்ணா உணவகங்கள் தொடங்கப்படும். இந்தஉணவகங்களில் ரூ.5-க்கு உணவுவழங்கப்படும்.தொழிலாளிகளுக்கான கடனுதவி திட்டம் தொடங்கப்படும். 3,000 கி.மீ. தொலைவுக்கு புதிய சாலைகள் அமைக்கப்படும். காந்திநகர், சூரத் மெட்ரோ ரயில் திட்டங்கள் விரைவுபடுத்தப்படும். வடோதரா, சவுராஷ்டிராவில் மெட்ரோ ரயில் சேவை அறிமுகம் செய்யப்படும். குஜராத் பொருளாதாரம் ஒரு டிரில்லியன் டாலராக மாற்றப்படும். இவ்வாறு பாஜக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x