

எச்ஐவி நோய் கிருமி பாதித்த ரத்தத்தை தவறுதலாக செலுத்தி யதால் அப்பாவிப் பெண்ணுக்கு எய்ட்ஸ் நோய் பாதித்ததாக அவரின் உறவினர்கள் அளித்த புகாரின் பேரில், பெங்களூருவில் உள்ள மருத்துவமனையின் மருத்துவர்கள், பணியாளர்கள் உட்பட 14 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பெங்களூருவைச் சேர்ந்தவர் ரூபா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). 36 வயதான இவர் கருப்பை கோளாறு காரணமாக கடந்த 2014-ம் ஆண்டு எம்.எஸ்.ராமையா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது மருத்துவர்கள், ‘ரூபாவின் உடலில் போதிய ரத்தம் இல்லை. ரத்தம் செலுத்திய பிறகே அறுவை சிகிச்சை செய்ய முடியும்’ எனக் கூறினர்.
குடும்பத்தினர் ஒப்புதல் அளித்த பிறகு ரூபாவுக்கு ரத்தம் செலுத்தப்பட்டு, அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அடுத்த சில மாதங்களில் ரூபா மீண்டும் நோய்வாய்ப்பட்டார். உடல் மெலிந்து தளர்வுற்றுக் காணப்பட்ட ரூபாவை குடும்பத்தினர் மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்றனர்.
அப்போது மருத்துவர்கள் அவரது ரத்தத்தை சோதித்தபோது எய்ட்ஸ் நோய் பாதிப்பு இருப்பது தெரியவந்தது. ரூபாவும், அவரது குடும்பத்தினரும் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். இதுதொடர்பாக சிறப்பு மருத்துவர்கள் ஆய்வு நடத்தியபோது எச்ஐவி கிருமி பாதித்த ரத்தத்தை தவறுதலாக செலுத்தியதால், எய்ட்ஸ் தாக்கியிருப்பது தெரியவந்தது.
இதையடுத்து ரூபாவின் உறவினர்கள் சதாசிவ நகர் காவல் நிலையத்தில் எம்.எஸ்.ராமையா மருத்துவமனைக்கு எதிராக புகார் அளித்தனர். ஆனால் போலீஸார் புகாரை ஏற்க மறுத்து, நடவடிக்கை எடுக்காமல் இழுத்தடித்தனர்.
இந்நிலையில் ரூபாவின் குடும் பத்தினர் பெங்களூரு மாநகர அமர்வு நீதிமன்றத்தில் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கு மாறு மனு அளித்தனர். இம்மனுவை விசாரித்த நீதிமன்றம், தவறான ரத்தத்தை செலுத்திய எம்.எஸ்.ராமையா மருத்துவமனையின் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்குமாறு போலீஸாருக்கு நேற்று உத்தரவிட்டது.
இதையடுத்து சதாசிவ நகர் போலீஸார், எம்.எஸ்.ராமையா மருத்துவமனை நிர்வாகிகள், மருத் துவர்கள், ஊழியர்கள் உள்ளிட்ட 14 பேர் மீது 6 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர்.