Published : 26 Nov 2022 03:46 PM
Last Updated : 26 Nov 2022 03:46 PM

“நீங்கள் 2002-ல் கற்றுக் கொடுத்த பாடத்தை அறிவோம்...” - அமித் ஷாவுக்கு ஒவைசி பதிலடி

அசாதுதீன் ஒவைசி | கோப்புப் படம்.

"2002-ல் குஜராத் கலவரத்திற்குக் காரணமானவர்கள் சரியான பாடம் கற்றுக் கொடுக்கப்பட்டது. அதனால்தான் குஜராத் 22 ஆண்டுகளாக அமைதியாக இருக்கிறது" என்று குஜராத் தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய அமித் ஷாவுக்கு பதிலடி கொடுத்துள்ளார் ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவர் அசாதுதீன் ஒவைசி.

இது குறித்து ஒவைசி கூறும்போது, "மத்திய உள்துறை அமைச்சருக்கு நான் ஒரு விஷயம் சொல்ல விரும்புகிறேன். நீங்கள் 2002-ல் கற்றுக்கொடுத்த பாடம் என்ன தெரியுமா? பில்கிஸ் பானோவை பாலியல் பலாத்காரம் செய்தவர்கள் விடுவிக்கப்படுவார்கள். பில்கிஸ் பானுவின் 3 வயது குழந்தை மற்றும்காங்கிரஸ் முன்னாள் எம்.பி. இசன் ஜாப்ரியை படுகொலை செய்தவர்கள் விடுவிக்கப்படுவார்கள் என்பதே. நீங்கள் கற்றுக்கொடுத்த பாடத்தால் தான் டெல்லியிலும் மதக்கலவரம் நடந்தா என்பதை தெரிவிப்பீர்களா?" என காட்டமாக வினவியுள்ளார்.

22 ஆண்டுகளாக நிரந்தர நிம்மதி: முன்னதாக அமித் ஷா தேர்தல் பிரச்சாரத்தில் பேசுகையில், "2002-ல் மத மோதல்களை ஏற்படுத்தியவர்களுக்கு சரியான பாடம் கற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது. அதனால் தான் குஜராத் 22 ஆண்டுகளாக அமைதியாக இருக்கிறது. 1995-க்கு முன்னர் காங்கிரஸ் ஆட்சியின் கீழ் குஜராத்தில் மத மோதல்களுக்கு பஞ்சமே இல்லை. காங்கிரஸ் கட்சி வெவ்வேறு சாதியினரிடையேயும், வெவ்வேறு மதத்தினரிடையேயும் பிரிவினையை உருவாக்கி அவர்களை மோதச் செய்தது.

அத்தகைய மோதல்கள் மூலமாகத்தான் காங்கிரஸ் அதன் வாக்கு வங்கியை வலிமைப்படுத்திக் கொண்டது. ஆனால் சமூகத்திற்கு அநீதி விளைவித்து வந்தது. 2002ல் குஜராத் கலவரத்தை சந்திக்க பலகாலமாக வன்முறையில் பலரும் பழகியிருந்தனர். காங்கிரஸால் பழக்கப்படுத்தப்பட்டு இருந்தனர். 2002க்குப் பின்னர் வன்முறையே இல்லை" என்று கூறியிருந்தார்.

குஜராத்தில் கடந்த 2002-ம் ஆண்டு கோத்ரா கரசேவகர்கள் வந்த சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயிலுக்குத் தீ வைக்கப்பட்டது. இதில் 59 பேர் பலியாகினர். இதைத் தொடர்ந்து குஜராத் மாநிலத்தின் பல்வேறு நகரங்களில் மதக் கலவரம் மூண்டது. அப்போது அகமதாபாத்தில் உள்ள குல்பர்க் சொசைட்டி பகுதியில் நடந்த வன்முறையில் 68 பேர் கொல்லப்பட்டனர். இதில் காங்கிரஸ் முன்னாள் எம்.பி. இசன் ஜாப்ரியும் கொல்லப்பட்டார்.

இதுதவிர அகமதாபாத் அருகில் உள்ள ரஸ்தீக்பூர் கிராமத்தை சேர்ந்த ஐந்துமாத கர்ப்பினி தாய் பில்கிஸ் பானு (21) மதவெறிக் கும்பலால் வழிமறித்து, அவரது மூன்று குழந்தைகளை பாறையில் அடித்துக் கொன்றதுடன் அவரோடு பயணித்த 14 பேர்களையும் கதறக் கதற படுகொலை செய்தது.பிலிகிஸ் பானு பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டார்.இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட 11 பேர் அண்மையில் விடுவிக்கப்பட்டனர் என்பது கவனிக்கத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x