

பிரதமர் நரேந்திர மோடியின் ரூபாய் பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்கு ஆதரவு பெருகிவருவதாக ஆளும் கட்சிகள் கொண்டாடி வரும் நிலையில் பொருளாதார அறிவுஜீவிகள் மட்டத்தில் கடும் விமர்சனங்கள் கிளம்பி வருகிறது.
இந்நிலையில் நோபல் பரிசு வென்ற இந்தியப் பொருளாதார அறிஞர் அமர்த்யா சென் விமர்சனக்குரல்களில் இணைந்துள்ளார்.
“நம்பிக்கையின் அடிப்படையில், வாக்குறுதிகளின் அடிப்படையில் இயங்கி வரும் பொருளாதாரத்தின் வேரையே அடித்து நொறுக்கும் எதேச்சதிகார முடிவே ரூ.500, ரூ.1000 நோட்டுகள் நீக்க நடவடிக்கை” என்று அமர்த்யா சென் சாடியுள்ளார்.
தொலைக்காட்சி சேனல் ஒன்றில் அவர் இதுகுறித்து கூறியதாவது:
ரூபாய் நோட்டுகள் புழக்கத்தை இந்த நடவடிக்கை வலுவற்றதாக்கியுள்ளதோடு வங்கிக் கணக்குகளையும் பாதித்துள்ளது. இதோடு பரஸ்பர நம்பிக்கையின் அடிப்படையில் இயங்கி வந்த பொருளாதாரத்திற்கே குழிபறித்துள்ளது. இந்தப் பொருளில்தான் நோட்டு நடவடிக்கை முடிவு எதேச்சதிகார முடிவாகும்.
பண மதிப்பு நீக்க நடவடிக்கை நம்பிக்கை அடிப்படையின் மீது கட்டமைக்கப்பட்ட பொருளாதாரத்திற்கு ஒரு சீரழிவு. கடந்த 20 ஆண்டுகளாக நாடு வேகமாக முன்னேறி வருகிறது. இது ஒவ்வொருவரும் பிறரது வார்த்தை மேல் வைத்துள்ள நம்பிக்கையினால் வளர்ந்த பொருளாதாரமாகும். வாக்குறுதிகள் மேல் கட்டப்பட்ட பொருளாதாரமாகும். நாங்கள் வாக்குறுதி கொடுத்தோம் ஆனால் அதனை பூர்த்தி செய்ய மாட்டோம் என்று கூறுவது போல் இந்த நடவடிக்கையை எடுத்திருப்பதன் மூலம் அடிவேரையே அடித்து நொறுக்கும் எதேச்சதிகார முடிவை எடுத்துள்ளார்கள்.
நான் முதலாளித்துவத்தை பெரிய அளவில் பாராட்டுபவன் அல்ல. ஆனாலும் முதலாளித்துவம் நிறைய சாதகங்களை கொண்டு வந்துள்ளது. ரூபாய் நோட்டை வெளியிடுவதன் மூலம் அது ஒரு உரிமைப் பத்திரம் ஆகிறது, அதாவது அரசு உங்களுக்கு இந்தத் தொகைக்கான உரிமை உள்ளது என்று வாக்குறுதி, உறுதி மொழி அளிக்கிறது, இந்த உறுதிமொழியை உடைப்பது எதேச்சதிகாரமானது என்றே கருதுகிறேன்.
இவ்வாறு கூறியுள்ளார் அமர்த்யா சென்.
நவம்பர் 8-ம் தேதி பிரதமர் மோடி ரூபாய் நோட்டு நடவடிக்கையை அறிவித்ததன் பிறகே அடிப்படை பொருளாதார நடவடிக்கைகள் பின்னடைவு கண்டு சிறிய வணிகங்கள் பாதிக்கப்பட்டு தொழிலாளர்கள் பலர் வேலையிழந்து வருவது குறிப்பிடத்தக்கது.