

அரசியல் கட்சிகள் வங்கிக் கணக்குகளில் டெபாசிட் செய்யும் பழைய ரூபாய் நோட்டுகளுக்கு நிபந்தனைகளுடன் மட்டுமே வரிவிலக்கு அளிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் காலாவதியாகி இருப்பதால் அவை வங்கிக் கணக்குகளில் டெபாசிட் செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில் அரசியல் கட்சிகள் டெபாசிட் செய்யும் பழைய ரூபாய் நோட்டுகளுக்கு வரிவிலக்கு அளிக்கப்படும் என்று மத்திய வருவாய் செயலாளர் ஹேஷ்முக் அதியா நேற்றுமுன்தினம் தெரிவித்தார். இதற்கு பல்வேறு தரப்பினர் கடும் ஆட்சேபம் தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து நேற்று அவர் கூறியதாவது:
பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள் வங்கிகளில் டெபாசிட் செய்யும் பழைய ரூபாய் நோட்டுகளுக்கு நிபந்தனைகளுடன் மட்டுமே வரிவிலக்கு அளிக்கப்படும். தனிநபர் நன்கொடை ரூ.20,000-க்கு மிகாமல் இருக்க வேண்டும். நன்கொடையாளரின் முழுவிவரமும் முழுமையான ஆவணங்களுடன் பராமரிக்கப்பட வேண்டும். சட்டவிதிகளின்படி தனிநபர், நிறுவனங்கள் வழங்கும் ரூ.20,000 நன்கொடை காசோலை அல்லது வரைவோலை மூலம் மட்டுமே பெற வேண்டும்.
விவசாய வருமானத்துக்கு வரிவிலக்கு பெறுபவர்கள் தங்களின் ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்துக்குள் மட்டுமே உள்ளது என்பது குறித்து சுயசான்று சமர்ப்பிக்க வேண்டும். அவர்களின் வங்கிக் கணக்குகளுக்கு பான் எண் அவசியமில்லை.
ஆனால் ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்துக்கு அதிகமாகவும் சுய சான்று சமர்ப்பிக்காத விவசாயிகளும் வங்கிக் கணக்குடன் கண்டிப்பாக பான் எண்ணை இணைக்க வேண்டும்.
சில விவசாயிகள் பல்வேறு வங்கிகளில் கணக்குகளை தொடங்கி வருமான வரித் துறையை ஏமாற்ற முயன்றால் அவர்கள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும்.
ஒரு மாதம் அல்லது 2 மாதங்களில் அனைத்து வங்கிக் கணக்குகளுடன் பான் எண்ணை இணைக்க அறிவுறுத்தப்படும். இதில் ஜன் தன் வங்கிக் கணக்குகள், பி.எஸ்.பி.டி. வங்கிக் கணக்குகளுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.