தலித், பழங்குடியினருக்கான நிதியில் ஒரு ரூபாய் கூட செலவிடவில்லை: கர்நாடக சமூக நலத்துறை அமைச்சர் வேதனை

தலித், பழங்குடியினருக்கான நிதியில் ஒரு ரூபாய் கூட செலவிடவில்லை: கர்நாடக சமூக நலத்துறை அமைச்சர் வேதனை
Updated on
1 min read

கடந்த 7 ஆண்டுகளாக தலித், பழங்குடியின மக்களுக்காக ஒதுக்கப்பட்ட ரூ. 1,500 கோடி நிதியில் ஒரு ரூபாய் கூட செலவிடப்படவில்லை என்பது வேதனையாக உள்ளது என்று கர்நாடக மாநில சமூக நலத்துறை அமைச்சர் எச்.ஆஞ்சநேயா கூறியுள்ளார்.

தலித், பழங்குடியின மக்களுக்கு இலவச கால்நடைகள் வழங்கும் திட்டத்தை விரைவில் செயல்படுத்தப்போவதாகவும் அவர் கூறியுள்ளார்.

சமூகத்தில் பின் தங்கிய நிலையில் வாழும் தலித், பழங்குடியின மக்களின் வளர்ச்சிக்காக ஆண்டுதோறும் கோடிக்கணக்கான ரூபாய் நிதியை மத்திய, மாநில அரசுகள் ஒதுக்குகின் றன. பெரும்பாலும் இந்த பணம் அந்த மக்களை சென்றடைவதில்லை என்பதே வேதனையான உண்மை.

கர்நாடகத்திலும் கடந்த ஆண்டு தலித், பழங்குடி மக்களுக்காக ஒதுக்கப்பட்ட ரூ.200 கோடியில் ஒரு ரூபாய் கூட அந்த மக்களின் வளர்ச்சிக்காக பயன்படுத்தப்படவில்லை என்ற தகவல் சமீபத்தில் வெளியானது. இது தொடர்பாக கர்நாடக சமூக நல‌த்துறை அமைச்சர் எச்.ஆஞ்சநேயாவை பெங்களூரில் 'தி இந்து' சார்பாக சந்தித்துப் பேசினோம்.

ரூ.1,500 கோடி செலவிடப்படவில்லை

அப்போது அவர் கூறும்போது, ‘‘கர்நாடகத்தில் சமூக நலத்துறையிலும், கால்நடை துறையிலும் தலித், பழங்குடியின மக்களுக்காக‌ 2013-ம் ஆண்டு ரூ.200 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. அந்த பணம் இன்னும் செலவிடப்படாமல் இருப்பது வேதனையாக உள்ளது.

இதேபோல கடந்த 7 ஆண்டுகளாக மதச்சார்பற்ற ஜனதா தளம், பா.ஜ.க., காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் ஆட்சியில் ஒதுக்கப்பட்ட சுமார் ரூ.1,500 கோடி ரூபாய் நிதியிலிருந்து அந்த மக்களின் வளர்ச்சிக்காக 1 ரூபாய் கூட பயன்படுத்தப்படவில்லை. 2009-ம் ஆண்டு கர்நாடகாவில் ஏற்பட்ட நிதி நெருக்கடியின் காரணமாக, இந்த பணத்தில் இருந்து ரூ.80 கோடியை இந்து அறநிலையத்துறை பயன்படுத்தி இருக்கிறது.

தலித், பழங்குடியின மக்களுக்கான‌ வளர்ச்சி நிதியை பயன்படுத்துவது குறித்து கர்நாடக முதல்வர் சித்தராமையாவுடனும், சட்டத்துறை அமைச்சர் டி.பி.ஜெயசந்திராவுடனும் ஆலோசனை செய்துள்ளேன். என்னுடைய தொடர் முயற்சியின் காரணமாக முதல்கட்டமாக கடந்த ஆண்டு கால்நடை, சமூக நலத் துறையில் தலித் மக்களின் வளர்ச்சிக்காக ஒதுக்கப்பட்ட நிதியையும் (ரூ.144 கோடி), பழங்குடியின மக்களின் வளர்ச்சிக்காக ஒதுக்கப்பட்ட நிதியையும் (ரூ.56 கோடி) செலவிட முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இலவச கால்நடை வழங்கும் திட்டம்

அதன்படி தலித் பால் உற்பத்தியாளர் களுக்கு 1 லிட்டர் பாலுக்கு கூடுதலாக ரூ. 2 ஊக்கத்தொகை வழங்க உத்தரவிட்டுள் ளேன். தலித்துகளுக்கு இலவசமாக கறவை மாடுகளும் ஆடுகளும் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் பழங்குடிகள் மற்றும் தலித் பெண்களின் சுயமுன்னேற் றத்திற்கான திட்டங்களுக்கு வட்டியில்லா கடன் வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது'' என்றார் எச்.ஆஞ்சநேயா.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in