Published : 25 Nov 2022 08:04 AM
Last Updated : 25 Nov 2022 08:04 AM

தேர்தல் ஆணையர்கள் நியமன விவகாரம் - தீர்ப்பை ஒத்தி வைத்தது உச்ச நீதிமன்றம்

புதுடெல்லி: தேர்தல் ஆணையர்கள் நியமன விவகாரம் தொடர்பான வழக்கில் உச்ச நீதின்றம் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்து உள்ளது.

தலைமை தேர்தல் ஆணையத்தில், தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் 2 தேர்தல் ஆணையர்கள் பணியாற்றுகின்றனர். அவர்களை நியமிக்க இப்போது கடைபிடிக்கப்படும் நடைமுறையில் மாற்றம் செய்ய வேண்டும் என்று கோரி கடந்த 2015-ம் ஆண்டு முதல் உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அலகாபாத் உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் அனுப் பாரன்வால், பாஜக மூத்த தலைவர் அஸ்வினி உபாத்யாயா உள்ளிட்டோர் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்களை நீதிபதிகள் கே.எம்.ஜோசப், அஜய் ரஸ்தோகி, அனிருதா போஸ், ரிஷிகேஷ் ராய், சி.டி.ரவிகுமார் ஆகியோர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரித்து வருகிறது.

இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் ஆஜராகி வாதிட்டார். அவர் கூறும்போது, “தேர்தல் ஆணையர் அருண் கோயலின் நியமனம் ஒரே நாளில் நடைபெற்றிருக்கிறது, ஏன் இந்த அவசரம்" என்று குற்றம் சாட்டினார்.

இதற்கு பதில் அளித்த அட்டர்னி ஜெனரல் வேங்கடரமணி, “நேர்மை, பணி மூப்பு, திறமை உள்ளிட்ட பல்வேறு அம்சங்களின் அடிப்படையில் தேர்தல் ஆணையர்கள் நியமிக்கப்படுகின்றனர். இந்த நியமனங்கள் மிக குறுகிய காலத்தில் நடைபெறுவது வழக்கமான ஒன்றுதான்" என்று வாதிட்டார்.

அப்போது குறுக்கிட்ட வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் தனது கருத்தை எடுத்துரைக்க முயன்றார். இதுகுறித்து அட்டர்னி ஜெனரல் கூறும்போது, “நீங்கள் (பிரசாந்த் பூஷண்) இப்போது பேசாமல் இருப்பது நல்லது" என்று கடிந்து கொண்டார்.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட பிறகு நீதிபதிகள் கூறியதாவது: கடந்த மே 15-ம் தேதி முதலே தேர்தல் ஆணையர் பணியிடம் காலியாக இருந்திருக்கிறது. இவ்வளவு நாட்கள் பணியிடத்தை நிரப்பாமல் நவம்பர் மாதத்தில் ஒரே நாளில் தேர்தல் ஆணையராக அருண் கோயல் நியமிக்கப்பட்டுள்ளார். அவரது நியமனம் தொடர்பான கோப்புகள் மின்னல் வேகத்தில் நகர்ந்துள்ளன.

தேர்தல் ஆணையர் நியமனத்தில் எந்த அடிப்படையில் 4 பேர் அடங்கிய பெயர் பட்டியலை மத்திய சட்ட அமைச்சர் தயார் செய்கிறார். அந்த பட்டியல் பிரதமருக்கு அனுப்பப்படுகிறது. அப்போது 4 பேரில் இருந்து ஒருவர் எவ்வாறு தேர்வு செய்யப்படுகிறார்?. இவ்வாறு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

புதிய தேர்தல் ஆணையர் அருண் கோயல் நியமனம் தொடர்பான கோப்புகளை மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் நேற்று தாக்கல் செய்தது. அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்துள்ள நிலையில் தேதி குறிப்பிடப்படாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x