

பணமதிப்பு நீக்க நடவடிக்கையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளை 9 அடிப்படை கேள்விகளுடன் உச்ச நீதிமன்றம் அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றியுள்ளது.
நவம்பர் 8 அறிவிக்கப்பட்ட பணமதிப்பு நீக்க நடவடிக்கை சட்டப்பூர்வமானதுதானா என்பதை நிர்ணயிக்க 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வை உச்ச நீதிமன்றம் ஏற்படுத்தி பணமதிப்பு நீக்கத்திற்கு எதிரான வழக்குகளை அதற்கு மாற்றியுள்ளது.
அதாவது பணமதிப்பு நீக்கத்திற்கு எதிரான வழக்குகளை 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன் அமர்வுக்கு உச்ச நீதிமன்றம் மாற்றியுள்ளது.
இந்நிலையில் தங்கள் கஷ்டங்களுக்கு உச்ச நீதிமன்ற உத்தரவின் மூலம் தீர்வு கிடைக்கும் என்று எதிர்பார்த்த மக்களுக்கு உச்ச நீதிமன்றம் எந்த ஒருஆறுதலையும் வழங்கவில்லை. தங்களின் பொருளாதாரக் கொள்கைகள் பற்றி முடிவெடுக்க அரசுதான் சிறந்தது என்று அரசின் முடிவுக்கு விட்டதாகவே தெரிகிறது.
ஆனால் வாரத்திற்கு ரூ.24,000 பணம் எடுக்கலாம் என்ற வாக்குறுதியை அரசு காப்பாற்ற வேண்டும் என்று மீண்டும் ஒருமுறை வலியுறுத்தியது.
இன்று இந்த முடிவை எடுத்த தலைமை நீதிபதி தாக்குர் தலைமையிலான அமர்வு, “இந்த நிலையில் பிற வழிகாட்டுதல்கள் சாத்தியமில்லை” என்று கூறிவிட்டது.
மாவட்ட கூட்டுறவு வங்கிகளிலிருந்து நவம்பர் 11 முதல் நவம்பர் 14 வரை வந்துள்ள ரூ.8,000 கோடி தொகையினை ஆர்பிஐ-யில் டெபாசிட் செய்யலாம் என்றும் இந்தப் பணத்தின் ஆதாரங்கள் கே.ஒய்.சி ஆகியவை குறித்து 100% தணிக்கைக்குப் பிறகு இந்தப் பணம் புதிய நோட்டுகள் மூலம் மாற்றீடு செய்யப்படும் பிறகு 367 மாவட்ட கூட்டுறவு வங்கிகளுக்கும் இந்தத் தொகைக்கான புதிய நோட்டுகள் அனுப்பபடும் என்ற அரசின் பதிலை உச்ச நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது.
மேலும் ரூ.5 லட்சம் கோடி புதிய நோட்டுகள் அதாவது 40% பணமதிப்பு நீக்கம் செய்யப்பட்ட நோட்டுகளுக்கு புதிய நோட்டுகள் வழங்கப்பட்டுள்ளன என்ற அரசின் பிரமாணத்தையும் உச்ச நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது. பழைய நோட்டுகளை மேலும் பயன்படுத்துவதற்கான கால அவகாசம் வழங்கவும் உச்ச நீதிமன்றம் மறுத்து விட்டது.
அரசியல் சாசன அமர்வு பரிசீலனை செய்யவுள்ள 9 கேள்விகள்:
1.நவம்பர் 8 அன்று அறிவிக்கப்பட்ட பணமதிப்பு நீக்க நடவடிக்கை ஆர்பிஐ சட்டம், 1954ன் சம்பந்தப்பட்ட சட்டப்பிரிவுகள் மற்றும் சட்டப்பிரிவு 26(2)-ன் அதிகார எல்லைகளுக்கு அப்பாற்பட்டதா?
2. இந்த அறிவிப்பு அரசியல் சட்டப்பிரிவு 300ஏ-ன் படி சொத்துக்கான உரிமையை மீறுகிறதா?
3. அரசியல் சட்டம் பிரிவு 14 மற்றும் 19-ன் அதிகார எல்லைகளுக்கு அப்பாற்பட்டதா இந்த நோட்டு நடவடிக்கை?
4. ஒருவர் தனது சொந்த பணத்தை எடுப்பதற்கு வரம்பு நிர்ணயிப்பது அரசியல் சட்டப்பிரிவுகள் 14, 19, 20 மற்றும் 21 ஆகியவற்றை மீறுகிறதா?
5. நோட்டு நடவடிக்கையை அமல்படுத்துவது நாட்டின் சட்டத்தை செயல்முறை ரீதியாகவும் அடிப்படை உரிமைகள் ரீதியாகவும் மீறுகிறதா?
6. ஆர்பிஐ சட்டத்தின் பிரிவு 26 (2) என்பதே அதிகப்படியான சட்ட அதிகாரங்களை வழங்கவல்லதா?
7. அரசின் நிதிசார்ந்த மற்றும் பொருளாதாரக் கொள்கைகள் பற்றிய நீதிசார் சீராய்வின் சாத்தியங்கள், வாய்ப்புகள் என்ன?
8. அரசியல் சட்டப்பிரிவு 32-ன் படி அரசியல் கட்சிகள் உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்ய முடியுமா?
9. டெபாசிட்கள் மற்றும் பணம் எடுப்பதற்கு மாவட்ட கூட்டுறவு வங்கிகளுக்கு விதிக்கப்பட்ட தடை பாரபட்சமானதா?
இந்த 9 கேள்விகளையும் அரசியல் சாசன அமர்வு பரிசீலிக்கவுள்ளது.
பல்வேறு மாநிலங்களில் ரூபாய் நோட்டு வாபசிற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கிற்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ள கோர்ட், 6 வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.