உ.பி.யில் ரயிலில் இருந்து தள்ளிவிடப்பட்ட ராணுவ வீரர் உயிரிழப்பு: கைதாகிறார் டிக்கெட் பரிசோதகர்

பிரதிநிதித்துவப் படம்
பிரதிநிதித்துவப் படம்
Updated on
1 min read

பெரேலி: உத்தரப் பிரதேசத்தில் ரயிலில் இருந்து தள்ளிவிடப்பட்ட ராணுவ வீரர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்தச் சம்பத்தில் தொடர்புடையதாகக் கருதப்படும் டிக்கெட் பரிசோதகரை கைது செய்ய தனிப்படை விரைந்துள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் பாலியா மாவட்டத்தைச் சேர்ந்த சோனு சிங் கடந்த 17 ஆம் தேதி அசாம் திப்ருகர் புதுடெல்லி ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்தார். அப்போது பெரேலி ரயில் நிலையம் நடை மேடை 2-ல் ஓடும் ரயிலில் இருந்து சோனு சிங் தள்ளிவிடப்பட்டார்.

இது குறித்து சக பயணி சுபேதர் ஹரேந்திரா சிங் போலீஸில் புகார் செய்தார். "சோனு சிங்குக்கு ஜெய்ப்பூர் ராஜ்புட் பட்டாலியனில் பணியில் இணையுமாறு கூறியிருந்தனர். அவர் டெல்லி சென்று கொண்டிருந்தார். பெரேலி ரயில் நிலையத்தில் காலை 9.15 மணியளவில் தண்ணீர் நிரப்ப பாட்டிலுடன் இறங்கினார். ஆனால் அவர் வருவதற்குள் ரயில் நகர ஆரம்பித்தது. அதனால் அவர் வேகமாக ஓடிவந்து ரயிலில் ஏற முயன்றார். ஆனால் ரயில் டிக்கெட் பரிசோதகர் சுப்பான் போர் அவரை கீழே தள்ளிவிட்டார். இதில் சமநிலை இழந்த என் நண்பர் சோனு சிங் ரயிலுக்கு அடியில் சென்றுவிட்டார். அதில் அவரது ஒரு கால் துண்டிக்கப்பட்டாது. மற்றொரு கால் கடுமையாக சேதமடைந்தது" என்று போலீஸ் புகாரில் ஹரேந்திரா குறிப்பிட்டிருந்தார்.

இதற்கிடையில் சோனு சிங்கிற்கு ராணுவ மருத்துவமனையில் திங்கள்கிழமை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் நேற்று (புதன்கிழமை) உயிரிழந்தார். அவருக்கு வயது 31. அவரது மரணத்தை ராணுவ மருத்துவமனை உறுதி செய்துள்ளது. இதனையடுத்து டிக்கெட் பரிசோதகர் போரை கைது செய்ய 4 தனிப்படைகள் விரைந்துள்ளது. சம்பவம் நடந்தது முதலே சோனு சுய நினைவில்லாமல் இருந்ததால் அவருடைய வாக்குமூலத்தை பதிவு செய்ய முடியவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் குறித்து ரயில்வே துறை, டிக்கெட் தொடர்பான வாக்குவாதத்தால் சுப்பான் போர் ஆத்திரத்தில் தான் இளம் வீரர் சோனு சிங்கை தள்ளிவிட்டார் என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in