மங்களூரு குண்டு வெடிப்பு வழக்கை என்ஐஏவிடம் ஒப்படைக்க கர்நாடகா முடிவு

மங்களூரு குண்டு வெடிப்பு வழக்கை என்ஐஏவிடம் ஒப்படைக்க கர்நாடகா முடிவு
Updated on
1 min read

பெங்களூரு: கர்நாடக மாநிலம் மங்களூருவில் கடந்த 19-ம் தேதி ஆட்டோவில் குக்கர் குண்டு வெடித்ததில் ஆட்டோ ஓட்டுநர் புருஷோத்தம் பூஜாரி (37) காயமடைந்தார். குக்கர் குண்டுடன் ஆட்டோவில் பயணித்த முகமது ஷரீக் (24) தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார்.

ஷரீக் தனது மத அடையாளத்தை மறைத்து செயல்பட்டது, போலி ஆதார் அட்டை மூலம் சிம் கார்டுவாங்கியது, ஷிமோகாவில் குண்டை வெடிக்க செய்து ஒத்திகையில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள மங்களூரு போலீஸார் 7 தனிப்படைகளை அமைத்து மைசூரு, ஷிமோகா, தமிழகத்தில் கோவை, நாகர்கோவில், கேரளாவில் கோழிக்கோடு, கொச்சி உள்ளிட்ட இடங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் கர்நாடக உள்துறை அமைச்சர் அரக ஞானேந்திரா, கர்நாடக போலீஸ் டிஜிபி பிரவீன் சூட், மங்களூரு மாநகர காவல் ஆணையர் சசிகுமார் உள்ளிட்டோர் நேற்று மங்களூருவில் குண்டுவெடித்த நகோரி சாலையில் ஆய்வு செய்தனர். பின்னர் அமைச்சர் அரக ஞானேந்திரா இந்த குண்டுவெடிப்பில் காயமடைந்த ஆட்டோ ஓட்டுநர் புருஷோத்தம் பூஜாரியை சந்தித்து நலம் விசாரித்தார். அவரது சிகிச்சைக்கு ரூ.50 ஆயிரம் வழங்கினார்.

பின்னர் அமைச்சர் அரக ஞானேந்திரா கூறுகையில், ‘‘ஐஎஸ் போன்ற தீவிரவாத அமைப்பு களின் செயலால் ஈர்க்கப்பட்ட முகமது ஷரீக் கடந்த சில ஆண்டுகளாக சதி செயலை அரங்கேற்றும் எண்ணத்துடன் செயல்பட்டுள்ளார். மங்களூரு போலீஸார் கர்நாடகா மட்டுமல்லாமல் தமிழகம், கேரளா ஆகிய மாநிலங்களிலும் விசாரணை நடத்தி வருகின்றனர். விரைவில் இவ்வழக்கு என்ஐஏ வசம் ஒப்படைக்கப்படும்’’ என்றார்.

மங்களூருவில் என்ஐஏ கிளை: பெங்களூரு தெற்கு தொகுதியின் பாஜக எம்பி தேஜஸ்வி சூர்யா, ‘‘கடந்த சில ஆண்டுகளாகவே மங்களூருவில் தீவிரவாதிகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இங்குள்ள தீவிரவாதிகளுக்கு ஐஎஸ் தீவிரவாதிகளுடன் நேரடி தொடர்பு இருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. எனவே மங்களூருவில் என்ஐஏ முகமையின் கிளையை விரைவில் திறக்க வேண்டும்'' என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in