

பண மதிப்பு நீக்க நடவடிக்கையால் நாடாளுமன்றம் தொடர்ந்து 3 வாரங்களாக முடங்கியதற்கு பாஜக மூத்தத் தலைவர் அத்வானி கடும் அதிருப்தி தெரிவித்துள்ளார்.
கறுப்புப் பணம் மற்றும் ஊழலை ஒழிக்கும் விதமாக கடந்த மாதம் 8-ம் தேதி பண மதிப்பு நீக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 3 வாரங்களாக நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். வாக்கெடுப்புடன் கூடிய விவாதம் நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர். இதன் காரணமாக நாடாளுமன்ற அலுவல் பணிகள் முற்றிலும் பாதிப்படைந்துள்ளது.
இந்நிலையில் நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் ஆனந்த் குமாரிடம் பாஜக மூத்தத் தலைவர் அத்வானி தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். அப்போது அவர், ‘‘சபாநாயகரோ, நாடாளுமன்ற விவகார அமைச்சரோ மக்களவையை நடத்தவில்லை. மக்களவையை அவர் நடத்தவில்லை என்று சபாநாயகரிடம் தெரிவியுங்கள் நான் இதனை வெளிப்படையாக தெரிவிப்பேன்” என்றார்.
பிறகு “எத்தனை மணி வரை அவை ஒத்தி வைக்கப்படுகிறது? என்று கேட்க அதற்கு நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த் குமார், ”பிற்பகல் 2 மணி வரை” என்றார்.
இதற்கு வெறுப்புடன் கூறிய அத்வானி, “அவையை 2 மணி வரை ஏன் ஒத்தி வைக்க வேண்டும். நாள் முழுவதும் ஒத்தி வைக்க வேண்டியது தானே?’’ என அதிருப்தியுடன் கூறினார்.