

மருத்துவப் படிப்புகளுக்கான ‘நீட்’ நுழைவுத் தேர்வை தமிழில் எழுதலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள் ளிட்ட மருத்துவப் படிப்புகளுக்கு தேசிய அளவில் ஒரே நுழைவுத் தேர்வை (நீட்) நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எனினும் தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களின் கோரிக்கையை ஏற்று நீட் தேர்வுக்கு ஓராண்டு விலக்கு அளிக்கும் அவசர சட்டத்தை மத்திய அரசு பிறப் பித்தது.
வரும் கல்வியாண்டு முதல் மருத்துவப் படிப்புகளுக்கு தேசிய அளவில் ‘நீட்’ நுழைவுத் தேர்வு நடத்தப்பட உள்ளது. இந்த தேர்வு தொடர்பாக மத்திய சுகாதார, குடும்ப நலத்துறை இணையமைச்சர் அனுபிரியா படேல் மக்களவையில் நேற்று எழுத்துபூர்வமாக அளித்த பதில் வருமாறு:
எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள் ளிட்ட மருத்துவப் படிப்புகளுக்கு (நீட்) நுழைவுத் தேர்வு நடத்து வது தொடர்பாக பல்வேறு மாநில அரசுகளுடன் மத்திய அரசு ஆலோசனை நடத்தியது.
அதன்படி வரும் 2017-ம் ஆண்டிற்கான ‘நீட்’ நுழைவுத் தேர்வு இந்தி, ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, மராத்தி, குஜராத்தி, அசாம் ஆகிய மொழிகளில் நடத்தப்படும். இந்த நுழைவுத்தேர்வால் இடஒதுக்கீட்டுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது.
இவ்வாறு இணையமைச்சர் அனுபிரியா படேல் தெரிவித் துள்ளார்.