Published : 23 Nov 2022 03:25 PM
Last Updated : 23 Nov 2022 03:25 PM

ராகுல் காந்தியின் தோற்றத்தை சதாம் உசேன் உடன் ஒப்பிட்ட அசாம் முதல்வருக்கு காங்கிரஸ் பதிலடி

இந்திய ஒற்றுமை யாத்திரையில் ராகுல் காந்தி

புதுடெல்லி: காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை பயணத்தை மேற்கொண்டு வருகிறார். அதனால், அவர் வழக்கமான தோற்றத்தில் இல்லாமல் கொஞ்சம் தாடி வைத்துள்ளார். இந்தச் சூழலில் அந்தப் பயணத்தை கேலி செய்தும், சதாம் உசேன் போல ராகுல் காந்தி தோற்றம் அளிக்கிறார் எனவும் அசாம் மாநில முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா பேசியுள்ளார். இதற்கு காங்கிரஸ் தரப்பில் பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது.

குஜராத் மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பரப்புரை பணியை ஹிமந்த பிஸ்வா மேற்கொண்டு வருகிறார். ராகுல் காந்தி குறித்த இந்தக் கருத்தை அவர் அகமதாபாத் பகுதியில் சொல்லி உள்ளதாக தெரிகிறது. இவர் காங்கிரஸ் கட்சியில் இருந்து கடந்த 2015-ல் விலகி பாஜகவில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

“ராகுல் காந்தியின் புதிய தோற்றத்தால் எந்தச் சிக்கலும் இல்லை என கடந்த சில தினங்களுக்கு முன்னர் தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றில் சொல்லி இருந்தேன். ஆனால் நீங்கள் உங்கள் தோற்றத்தை மாற்ற நேர்ந்தால் குறைந்தபட்சம் நேரு போலவோ அல்லது வல்லபாய் படேல் போலவோ மாற்றி இருக்கலாம். ஏன் நீங்கள் காந்தியை போல கூட மாற்றி இருக்கலாம். ஆனால் இப்போது சதாம் உசேன் போல உள்ளது.

அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா

காங்கிரஸ் தலைவர்கள் இந்திய கலாச்சாரத்திற்கு நெருக்கமாக இல்லாமல் போனதற்கு இந்த மாதிரியான பழக்கவழக்கங்கள் தான் காரணம். எப்போதுமே அந்நிய கலாச்சாரத்தை பின்பற்றுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்கள்” என ஹிமந்த பிஸ்வா கூறியிருந்தார்.

தங்கள் தலைவரை மறைந்த முன்னாள் ஈராக் அதிபர் சதாம் உசேன் உடன் ஒப்பிட்டு பேசிய ஹிமந்த பிஸ்வாவுக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளனர் காங்கிரஸ் கட்சியினர்.

“பாஜகவை பார்த்து எனக்கு சிரிப்புதான் வருகிறது. இந்திய ஒற்றுமைப் பயணம் அவர்களுக்கு இம்சையாக இருக்கிறது என கருதுகிறேன். இந்த அளவுக்கு தாழ்மையான கருத்துகளை சொல்லும் நிலைக்கு ஆளாகியுள்ளார்கள். பிரதமர் மோடி கூட நீண்ட தாடி வைத்திருந்தார். அப்போது அதுகுறித்து நாங்கள் எதுவும் சொல்லவில்லை. நாங்கள் உண்மையான மக்கள் பிரச்சினைகளை பேசுகிறோம்.

பிரதமர் தனக்கு எதிராக சதி நடப்பதாக சொல்லியுள்ளார். பொதுவாக பூட்டிய அறைக்குள்தான் சதித் திட்டங்கள் தீட்டப்படும். லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்கும் யாத்திரை பயணத்தில் அல்ல” என காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சந்தீப் தீக்‌ஷித் பதிலடி கருத்தைப் பதிவு செய்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x