Published : 08 Jul 2014 04:43 PM
Last Updated : 08 Jul 2014 04:43 PM

மத்திய அரசின் பார்வை: கவர்ச்சித் திட்டங்கள் இல்லாத ரயில்வே பட்ஜெட்

கவர்ச்சித் திட்டங்கள், நிர்வாக சீர்கேட்டால் மிகவும் மோசமான நிலையில் இருக்கும் ரயில்வே நிதி நிலைமையை சீர் செய்யும் வகையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

2014-15-க்கான ரயில்வே பட்ஜெட்டை மத்திய ரயில்வே அமைச்சர் சதானந்த கவுடா இன்று தாக்கல் செய்தார். இது தொடர்பாக அரசு செய்திக் குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:

"இன்று (செவ்வாய்கிழமை) தாக்கல் செய்யப்பட்ட 2014-15-க்கான ரயில்வே பட்ஜெட் பயணிகள் நலனில் அக்கறையும், அவர்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலும் அமைந்துள்ளது.

மேலும் புதிய ரயில்வே திட்டங்களை குறிப்பிட்ட கால அளவில் நிறைவேற்றுவதும், நிதிநிலையை மேம்படுத்துவதும் இந்த பட்ஜெட்டின் சிறப்பு அம்சமாக உள்ளன. பயணிகள் ரயில் கட்டணம் மற்றும் சரக்கு கட்டணம் உயரத்தப்படவில்லை.

கவர்ச்சித் திட்டங்கள் இல்லை:

கவர்ச்சித் திட்டங்கள், நிர்வாக சீர்கேடு இவற்றால் கடந்த சில ஆண்டுகளாக மிகவும் மோசமான நிலையில் இருக்கும் ரயில்வே நிதி நிலைமையை சீர் செய்யும் வகையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதற்காக, ரயில்வே துறையில் அந்நிய நேரடி முதலீடு, பொதுத்துறை - தனியார் துறை பங்கீட்டில் செயல்திட்டங்களை நிறைவேற்றும் முறை ஆகியன அறிமுகப்படுத்தப்பட உள்ளன.

பயணிகள் வசதிக்கு முன்னுரிமை:

பட்ஜெட்டில் பயணிகள் வசதிக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. பயணிகள், பாதுகாப்பாக, வசதியான பிரயாணம் மேற்கொள்ள கூடுதல் அக்கறை செலுத்தப்பட்டுள்ளது. ரயில்நிலையங்கள் மற்றும் ரயில்களில் சுகாதாத்தை மேம்படுத்த பல்வேறு திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படவுள்ளன. அனைத்து முக்கிய ரயில் நிலையங்களிலும், எஸ்கலேட்டர்கள் மற்றும் லிப்ட் வசதிகள் அறிமுகப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விபத்து தடுப்பு நடவடிக்கை:

பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய விபத்துகளை தடுப்பதற்காக உயர் தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் நடவடிக்கைகளை ரயில்வே மேற்கொள்ளும் என அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, மெயின்லைன் மற்றும் புறநகர் ரயில்களில் தானியங்கி கதவுகள் அறிமுகப்படுத்தப்படும். பெண் பயணிகள் பாதுகாப்புக்காக 4000 பெண் காவலர்கள் பணியமர்த்தப்படுவார்கள். பெண் காவலர்களுக்கு செல்போன் வழங்கப்படும் போன்ற அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.

டிக்கெட் முன்பதிவில் மேம்பாடு:

இந்த ரயில்வே பட்ஜெட்டில் பயணிகள் வசதிக்காக தொழில்நுட்ப மேம்பாட்டிற்கு கூடுதல் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, நடைமேடை டிக்கெட் மற்றும் முன்பதிவு செய்யப்படாத வகுப்புகளுக்கான டிக்கெட்டுகளையும் ஆன்லைனில் பெற வசதி செய்யப்படும். பயணிகள் தாங்கள் இறங்கும் இடத்தை அறிந்து கொள்ளும் வகையில் மொபைல் போனில் 'வேக்-அப் கால் சிஸ்டம்' அறிமுகப்படுத்தப்படும். ஏ1 மற்றும் ஏ பிரிவு ரயில் நிலையங்கள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட ரயில்களில் வைஃபை (Wifi) இன்டர்நெட் வசதி செய்துதரப்படும். இ-டிக்கெட் சேவை தரம் உயர்த்தப்படும். ஒரு நிமிடத்தில் 7200 டிக்கெட்டுகளை பதிவு செய்யும் வகையிலும், ஒரே நேரத்தில் 1.2 லட்சம் வாடிக்கையாளர்கள் இணையத்தை அணுகும் வகையிலும் தொழில்நுட்பம் மேம்படுத்தப்படும்.

மேலும், பயணிகள் போன், எஸ்.எம்.எஸ். மூலமாக உணவு தேவை குறித்து தகவல் அனுப்ப வழிவகை செய்யப்படும். அதேபோல், பயணிகள் உணவுத்தரம் குறித்த பின்னூட்டத்தை ரயில்வே துறைக்கு அனுப்பவும் வசதி ஏற்படுத்தப்படும். ரயில்கள் வருகை, புறப்பாடு குறித்த தகவல்கள் (எஸ்.எம்.எஸ்) குறுஞ்செய்தி மூலம் அளிக்கப்படும். டிக்கெட் முன்பதிவு முறைகள் மேம்படுத்தப்படும். மொபைல் மூலமாக, தபால் நிலையங்கள் மூலமாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வது பிரபலப்படுத்தப்படும் போன்ற அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.

ரயில்வே நிர்வாகத்தை மேலும் திறன் வாய்ந்ததாக உருவாக்கும் வகையில், தொழில்நுட்பம் மற்றும் தொழில்நுட்பம் சாரா படிப்புகளை பயிற்றுவிக்கும் ரயில்வே பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

புல்லட் ரயில்கள்:

மும்பை - அகமதாபாத் மார்க்கத்தில் புல்லட் ரயில் இயக்குவதற்கான சாத்தியக்கூறுகள் பலமுறை விரிவாக ஆராயப்பட்டுள்ளன. எனவே அந்த மார்க்கத்தில் முதலில் புல்லட் ரயில் இயக்கலாம் என பட்ஜெட்டில் யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுதவிர, அதிவேக ரயில்களுக்கான 'வைர நாற்கர' திட்டம் செயல்படுத்தப்படும். குறிப்பிட்ட சில மார்க்கங்களில் செல்லும் ரயில்கள் வேகத்தை மணிக்கு 160 கி.மீ இருந்து 200 கி.மீ வரை அதிகரிக்கப்படும் போன்ற ரயில்வே துறையை நவீனப்படுத்துவதற்கான அறிவிப்புகளும் வெளியாகியுள்ளன. ரயில் நிலையங்கள், ரயில்வே கட்டிடங்கள், ரயில்வேக்கு சொந்தமான நிலங்களில் சூரிய மின்சக்தி திட்டங்கள் செயல்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

வருவாய் அதிகரிப்பு திட்டங்கள்:

ரயில்வே துறையின் வருவாயை பெருக்கவும் பட்ஜெட்டில் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. பார்செல் வாகனங்கள் வசதிகளைப் பயன்படுத்துவதில் தனியார் நிறுவனங்களை ஊக்கப்படுத்துதல், பால் ஏற்றிச் செல்ல சிறப்பு கண்டெய்னர்கள் அறிமுகப்படுத்துதல், காய்கறிகள், பழங்கள் போன்றவற்றை பெருமளவில் ரயில்களில் கொண்டு செல்லும் வகையில் கிடங்குகளுடன் புதிய ஒப்பந்தங்கள் மேற்கொள்ளுதல், தனியார் சரக்கு முனையங்கள் அமைத்தல் போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை:

ரயில்வே நிர்வாகத்திலும், புதிய திட்டங்களை செயல்படுத்துவதிலும் வெளிப்படைத் தன்மை கடைபிடிக்கப்படும். அந்த வகையில், ரயில்வே திட்டங்களின் நிலவரம் குறித்து ஆன் லைனில் தெரிந்து கொள்ள வழிவகை செய்யப்படுகிறது. அதிக செலவில் வாங்கப்படும் உபகரணங்கள் ஆன்லைன் மூலம் வாங்கப்பட வேண்டும் என்பது கட்டாயமாக்கப்படும். அடுத்த இரண்டு மாதங்களில், ரயில் பெட்டிகளையும் ஆன் லைன் மூலம் வாங்க வழிவகை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பெருநகரம் மற்றும் புறநகர் ரயில் சேவை பயணிகள் கூடுதலாக பயன் பெறும் வகையில் சீரமைக்கப்படும் என்ற அறிவிப்பு பட்ஜெட்டில் வெளியாகி இருக்கிறது. மும்பையில் அடுத்த 2 ஆண்டுகளில் 864 மின்சார ரயில் சேவைகள் அறிமுகப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

58 புதிய ரயில்கள்:

2014-15 ரயில்வே பட்ஜெட்டில் 58 புதிய ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஏற்கெனவே உள்ள 11 ரயில்களின் சேவை நீட்டிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 28 மார்க்கங்களில் புதிதாக ரயில் சேவை அமைக்க ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு மாநிலங்களில் மேற்கொள்ளப்பட்டுவரும் ரயில்வே திட்டங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்படும். புனிதத்தலங்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். விவேகானந்தர் வாழ்க்கை மற்றும் அவரது படைப்புகள் குறித்து எடுத்துரைக்கும் வகையில் சிறப்பு ரயில் இயக்கப்படும் போன்ற அறிவிப்புகளும் வெளியாகியுள்ளன.

2014-15 நிதியாண்டில், ரயில்வே துறை ரூ.1,64,374 கோடி வருவாய் ஈட்டும், ரூ.1,49,176 கோடி செலவு செய்யும் என கணக்கிடப்பட்டுள்ளது." இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது, கட்டண உயர்வு இல்லாத ரயில்வே பட்ஜெட் என்றாலும், முன்கூட்டியே ரயில் கட்டணங்கள் உயர்த்துப்பட்டுவிட்டது கவனிக்கத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x