

டெல்லியில் கடுமையான பனிமூட்டம் நிலவி வருகிறது. இதன் காரணமாக கடந்த சில நாட்களாகவே ரயில் போக்குவரத்து அவ்வப்போது பாதிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இன்று (சனிக்கிழமை) காலையில் பனிமூட்டம் மிக அதிகமாக இருந்தது. இதன் காரணமாக 56 ரயில்கள் சில மணி நேரம் தாமதமாக பயணிக்கும் என்றும், 12 ரயில்களின் புறப்படும் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது எனவும் டெல்லி ரயில்வே துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
பனிமூட்ட நிலவரம் குறித்து டெல்லி வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலில், "கடுமையான பனி மூட்டத்தின் காரணமாக தலைநகர் டெல்லியில் 400 மீட்டர் தொலைவுக்கு பனி படர்ந்து காணப்படுகிறது. இதனால் சாலைகளை தெளிவாக பார்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இன்று காலை 8.30 மணியளவில் கணக்கிடப்பட்ட வானிலை தகவலின்படி, வளிமண்டலத்தில் ஈரப்பதத்தின் அளவு 92% உள்ளது. வெப்பத்தின் அளவு 8.2 டிகிரி செல்சியஸ் ஆக உள்ளது. இன்னும் சில தினங்கள் வானம் தெளிவாக காணப்படும்" என்று கூறப்பட்டுள்ளது.
எனினும் கடுமையான பனி மூட்டத்தால் டெல்லி இந்திரா காந்தி விமான நிலையத்தில் போக்குவரத்தில் பாதிப்பு ஏதும் இல்லை என விமானத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.