

குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு தொடர்ந்து 3 முறை முதல்வராக பதவியேற்றவர் நரேந்திர மோடி. கடந்த 2002-ல் நிகழ்ந்த மதக்கலவரத்துக்குப் பின் நடந்த தேர்தலிலும் மோடி வெற்றி பெற்று முதல்வரானார். பின்னர் 2014 மக்களவைத் தேர்தலில் வெற்றிப் பெற்று மோடி பிரதமரானார். இதனால் அவருக்குப் பின் குஜராத்தின் முதல்வராக ஆனந்திபென் பதவி யேற்றார். எனினும் சர்ச்சைக்குரிய சில சம்பவங்கள், அரசியல் நிலைப்பாடுகள் அவரது பதவிக்கு ஆபத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து முதல்வர் பதவியை ஆனந்திபென் ராஜினாமா செய்தார்.
இதைத் தொடர்ந்து விஜய் ரூபானி முதல்வராக பதவியேற்றார். ஆனால் மோடிக்கு இருக்கும் செல்வாக்கு இவருக்கு இல்லை. இதனால் வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் நிச்சயம் வெற்றி பெற முடியும் என காங்கிரஸ் நம்புகிறது. ஆனால், வெற்றியை ஈட்டுவதற்கான முதல்வர் வேட்பாளரை அறிவிப்பதில் தான் காங்கிரஸ் தொடர்ந்து தயக்கம் காட்டி வருகிறது. பிற மாநிலங்களைப் போல குஜராத்திலும் காங்கிரஸ் கட்சிக்குள் நீடிக்கும் கோஷ்டி பூசலே இந்த தயக்கத்துக்கு காரணம் என கூறப்படுகிறது.
இது குறித்து காங்கிரஸ் நிர்வாகிகள் வட்டாரம் ‘தி இந்து’விடம் கூறும்போது, ‘குஜராத் தின் மூத்த தலைவர்களுக்குள் உள்கட்சி மோதல் நிலவுவது பலரும் அறிந்ததே. இவர்களில் இருந்து ஒருவரை முதல்வர் வேட்பாளராக அறிவித்தால் கட்சிக்குள் பிளவு அதிகரிக்கும். வெற்றி வாய்ப்பும் பாதிக்கும்’ என தெரிவித்தனர்.
பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த மாநிலத்தில் நடக்கும் இந்த தேர்தலில் காங்கிரஸ் வெற்றிப் பெற்றால் தேசிய அளவில் அக்கட்சிக்கு அதிக பலன் கிடைக்கும். ஆனால் கோஷ்டி அரசியலால் 1989-ம் ஆண்டு முதல் ஆட்சியை பிடிக்க முடியாமல் காங்கிரஸ் தொடர்ந்து திண்டாடி வருகிறது.
முதல்வர் வேட்பாளர்
குஜராத் காங்கிரஸை பொறுத்தவரை பரத்சிங் சோலங்கி, சங்கர்சிங் வகேலா, சக்திசிங் கோஹில், அர்ஜுன் மாத்வதியா ஆகிய 4 மூத்த தலைவர்கள் முதல்வர் பதவிக்கான போட்டியில் உள்ளனர். அவர்களில் சங்கர்சிங் வகேலாவுக்கே மக்கள் மத்தியில் அதிக செல்வாக்கு இருப்பதாக கூறப்படுகிறது.
இதனால், வரவிருக்கும் தேர்தலில் வகேலாவை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க காங்கிரஸ் மேலிடம் ஆலோசித்து வருவதாகக் கூறப்படுகிறது.