

தேர்தலில் போட்டியிடாமல் இருந்த 200 அரசியல் கட்சிகளின் நிதி ஆதாரங்களை ஆராயும்படி வருமான வரித்துறை அதிகாரி களுக்கு தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்யவுள்ளது.
கடந்த 2005-ம் ஆண்டு முதல் தேர்தலில் போட்டியிடாமல் இருந்த பல்வேறு அரசியல் கட்சிகளைத் தேர்தல் ஆணையம் அடையாளம் கண்டு பட்டியலிட்டு வைத்திருந்தது. அதில் 200-க்கும் மேற்பட்ட கட்சிகள் நன்கொடை களை பெற்று கறுப்புப் பணத்தை வெள்ளையாக்கும் முயற்சிகளில் ஈடுபட்டிருப்பதாக தேர்தல் ஆணையம் கருதுகிறது. இதைத் தொடர்ந்து அந்த கட்சிகளின் நிதி ஆதாரங்களை ஆராயும்படி வருமான வரித் துறைக்கு பரிந்துறை செய்ய தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. சோதனையில் சட்ட விரோதமான முறையில் பணப் பரிவர்த்தனை நடந்திருந்தால் அக்கட்சிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படியும் வலியுறுத்தவுள்ளது.
நாடு முழுவதும் 1,780 கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் பதிவு செய்துள்ளன. ஆனால் பெரும்பா லான கட்சிகளுக்கு அங்கீகாரம் வழங்கப்படவில்லை. பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட 7 தேசிய கட்சிகளுக்கும், 58 மாநில கட்சி களுக்கும் மட்டுமே அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.