பிரதமர் மன்னிப்பு கோர வலியுறுத்தல்: எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கடும் அமளி- நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு

பிரதமர் மன்னிப்பு கோர வலியுறுத்தல்: எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கடும் அமளி- நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு
Updated on
2 min read

ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பைக் கண்டித்து, மக்களவையில் எதிர்க்கட்சியினர் நேற்றும் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் பெரும்பாலான அலு வலகள் நடைபெறாமல் நாள் முழு வதும் அவை ஒத்திவைக்கப்பட்டது.

நாடாளுமன்றத்தில் மக்களவை நேற்று காலை கூடியதும், ரூபாய் நோட்டுகள் விவகாரத்தை எதிர்க் கட்சி எம்.பி.க்கள் மீண்டும் கிளப் பினர். காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ், இடதுசாரி கட்சியினர் சபாநாயகர் இருக்கை முன்பு சென்று மத்திய அரசுக்கு எதிராக சத்தமாக கோஷமிட்டனர்.

ஒரு கட்டத்தில் சிலர் ஊளையிடுவது போல் சத்தம் எழுப்பினர். அப்போது அதிமுக, ஆர்ஜேடி, என்சிபி ஆகிய கட்சி எம்.பி.க்கள் தங்கள் இருக்கை அருகே நின்றிருந்தனர்.

கேள்வி நேரத்தின் போதும் எதிர்க்கட்சியினரின் அமளி நீடித்தது. அப்போது எம்.பி.க்களை சபா நாயகர் சுமித்ரா மகாஜன் எச்சரித் தார். அவர் கூறும்போது, ‘‘அவை யில் மற்ற உறுப்பினர்களுக்குத் தொந்தரவு கொடுப்பது சரியல்ல. மேலும், அமைச்சர்கள் பதில் அளிக்கும் போது, உறுப்பினர்கள் இடையூறு செய்யக் கூடாது’’ என்று எச்சரித்தார். எனினும், அவையில் தொடர்ந்து கூச்சல் நிலவியது.

அப்போது கோபம் அடைந்த சபாநாயகர், ‘‘நான் உங்களை எச்சரிக்கிறேன். உங்கள் பெயர்களைச் சொல்ல வேண்டியிருக்கும். மீண்டும் நான் உங்களை வேண்டிக் கொள்கிறேன். இதுபோல் கூச்சலிடுவது சரியல்ல, முறையல்ல, நீங்கள் மற்ற உறுப்பினர்களைத் தொந்தரவு செய்யாதீர்கள்’’ என்று எதிர்க்கட்சியினரை எச்சரித்தார்.

ஆனால், எதிர்க்கட்சியினர் தொடர்ந்து அரசுக்கு எதிராக கூச்சல் எழுப்பினர். சபாநாயகர் மீண்டும் பேசும்போது, ‘‘உங்களை நான் தடுக்கவில்லை. ஆனால், மற்ற உறுப்பினர்களின் உரிமைகளைத் தடை செய்யாதீர்கள். ஆளும் கட்சியினர் அமர்ந்துள்ள பக்கம் எதிர்க்கட்சியினர் வரவேண்டாம். பதில் அளிக்கும் அமைச்சர்களைத் தொந்தரவு செய்யாதீர்கள்’’ என்றார். எனினும் கூச்சல் நிற்கவில்லை.

இதற்கிடையில் ரூபாய் நோட்டுகள் விவகாரம் குறித்து வாக்கெடுப்புடன் கூடிய விவாதம் நடத்த அனுமதி கோரி காங்கிரஸ் உட்பட பல்வேறு கட்சிகள் கொடுத்த நோட்டீஸையும் சபாநாயகர் சுமித்ரா நிராகரித்தார். இதனால் அமளி நீடித்தது இதனால் பிற்பகல் 12.30 மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்டது. இந்த அமளிக்கு இடையிலும் உறுப்பினர்களின் 7 கேள்விகள் மற்றும் துணை கேள்விகள் எடுத்துக் கொள்ளப்பட்டன. அவற்றுக்கு சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் பதில் அளித்தனர்.

பிற்பகல் அவை கூடியதும் பூஜ்ய நேரம் எடுத்துக் கொள்ளப்பட்டது. அரை மணிநேரமே அலுவல் நடந்தது. அப்போதும் அமளி நீடித்ததால் மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்படுவதாக சுமித்ரா அறிவித்தார்.

மாநிலங்களவையில்..

மாநிலங்களவையிலும் எதிர்க் கட்சிகள் கடும் அமளியில் ஈடு பட்டன. ரூபாய் நோட்டு விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்துக்கு வெளியில் கருத்து தெரிவித்த பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோரி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர்.

பிற்பகல் கேள்வி நேரத்தின்போது மாநிலங்களவை தலைவர் ஹமீத் அன்சாரி, முதல் கேள்வியை எடுத்துக் கொண்டார். அப்போது காங்கிரஸ், திரிணமூல், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் உறுப்பினர்கள் அவையின் மைய பகுதிக்குச் சென்று அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். பிரதமர் மோடி நேரில் வந்து மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

அதற்கு பாஜக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து பதிலுக்கு கோஷம் எழுப்பினர். இதனால் அவையில் கூச்சல் குழப்பம் நிலவியது. அதிமுக உறுப் பினர்களும் மைய பகுதிக்குச் சென்று ஏதோ கோரிக்கையை எழுப்பினர். ஆனால், கூச்சலில் அவர்கள் என்ன கோரிக்கை எழுப்பினார்கள் என்பது தெளிவாக கேட்கவில்லை.

எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவை மாண்பை காக்க வேண்டும் என்று அன்சாரி விடுத்த அழைப்பு ஏற்காமல் தொடர்ந்து அமளி நிலவியது. இதனால் அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

கடந்த நவம்பர் 16-ம் தேதி நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் தொடங்கியது. அன்று முதல் நேற்று வரை ரூபாய் நோட்டுகள் விவகாரத்தை எதிர்த்து எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றன. இதனால் எந்த அலுவலும் நடைபெறாமல் மக்களவை, மாநிலங்களவை இரண்டும் முடங்கி போயின.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in