

பண மதிப்பு நீக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு ஒருமாத காலமாகியும் தீராத துன்பம், இன்னல்கள், இதற்கான பொறுப்பை ஏற்றுக் கொண்டு நாட்டு மக்களுக்கு விளக்கம் அளிப்பாரா பிரதமர் மோடி என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஒருமாத காலமாக துன்புறுத்தல், வலி, நம்பிக்கையின்மை, நிதிப் பாதுகாப்பின்மை, பெரும் குழப்பம், இவையே கறுப்பு நடவடிக்கையான பண மதிப்பு நீக்கத்திற்கு பிறகு சாமானிய மக்கள் பெற்றது.
இவை எல்லாவற்றிற்கும் பொறுப்பேற்றுக் கொண்டு நாட்டு மக்களுக்கு நிலைமைகளை பிரதமர் விளக்குவது அவசியமாகிறது.
கறுப்புப் பணம் மீட்கப்படவில்லை, சாமானிய மக்கள் உழைத்துச் சம்பாதித்த வெள்ளப்பணம் பறித்துச் செல்லப்பட்டுள்ளது.
அயல்நாடுகளிலிருந்தும் கறுப்புப் பணம் மீட்கப்படவில்லை. கறுப்புப் பணத்தை ஒழிக்கிறேன் என்ற போர்வையில் மத்தியில் ஆளும் கட்சி நிலம், வங்கி டெபாசிட்கள், தங்கம், வைரம் என்று சொத்துகளை சேர்த்துள்ளனர். இவர்கள் பெரும் முதலாளிகள் ஆகியுள்ளனர்.
நோட்டு நடவடிக்கைக்குப் பிறகு 90 பேர் பலியாகியுள்ளனர், இன்னும் எத்தனை பேர் மோடிபாபு?
உற்பத்தி கடும் வீழ்ச்சியடைந்துள்ளது, வேளாண் நடவடிக்கைகள் சிதைவுண்டு சின்னாபின்னமாகியுள்ளது. கொள்முதல், விற்பனை கடும் சரிவு கண்டுள்ளது, பொருளாதாரமே கிழிந்து தொங்குகிறது, நாடு முழுதுமே முன்னெப்போதும் இல்லாததை விட நிதி நெருக்கடியில் தத்தளித்து வருகிறது.
விவசாயிகள், தொழிலாளர்கள், வெகுஜன துறைகளில் பணியாற்றும் முறைசாரா தொழிலாளர்கள், தேயிலைத் தோட்டம், பீடி மற்றும் சணல் தொழிலாளர்கள், மாணவர்கள், உடல்நலம் குன்றியவர்கள், முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் என்று அனைத்து தரப்பினரும் வாழ்க்கையில் சொல்லொணா துயரங்கள் ஏற்பட்டுள்ளது
உதவியின்றி சாமானிய மனிதர்கள் தவித்து வருகின்றனர். தாய்மார்களும், சகோதரிகளும் தங்களது சிறு சொந்த சேமிப்புக்ளை இழந்து குடும்பம் நடத்த பணத்தட்டுப்பாட்டில் சிக்கித் தவித்து வருகின்றனர்.
இந்த துரதிர்ஷ்டவசமான விளைவுகள் எப்போது முடியும் என்று ஒருவருக்கும் தெரியவில்லை.
சாமானிய மக்களை மூளையற்று துன்புறுத்தும் இது எப்போது முடிந்து நல்லுணர்வு எப்போது ஏற்படும் என்று ஒருவருக்கும் தெரியவில்லை.
மக்கள் தங்கள் பணத்தை எடுக்க சுதந்திரம் வேண்டும். வங்கிகளில் தங்கள் பணம் பாதுகாப்பாக இருக்கிறதா என்ற உத்தரவாதம் மக்களுக்கு வேண்டும்.
நாங்கள் தொடர்ந்து இந்த விவகாரத்தை நாடாளுமன்றத்திலும் வேறு சில மேடைகளிலும் எழுப்பி வருகிறோம். முன்னணி பொருளாதார நிபுணர்கள் இந்த மூளையற்ற செயலை விமர்சனம் செய்தபடியேதான் இருக்கின்றனர், ஆனால் எதற்கும் மத்திய அரசு அசைந்து கொடுக்கவில்லை” என்று கூறியுள்ளார்.