

வட இந்தியாவில் உத்தரப் பிரதேசத்தின் அலகாபாத்தில் கடந்த ஏப்ரல் 23, 2007-ல் நடைபெற்றது ஜெயலலிதா கலந்து கொண்ட ஒரே ஒரு தேர்தல் பிரச்சாரக் கூட்டமாகக் கருதப்படுகிறது. இங்கு முலாயம்சிங் தலைமையிலான சமாஜ்வாதி கட்சிக்காக அவர் இந்தியில் பேசி இருந்தார்.
கடந்த 2007-ல் காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதாவிற்கு எதிராக பல கட்சிகள் தேசிய அளவில் மூன்றாவது அணியாகத் திரண்டனர். இதன் இரண்டாவது கூட்டம் மற்றும் உத்தரப் பிரதேச சட்டப்பேரவையின் தேர்தல் பிரச்சாரக் கூட்டம், அலகாபாத் நகரில் கடந்த ஏப்ரல் 23, 2007-ல் நடைபெற்றது. இங்குள்ள கே.பி.இண்டர் காலேஜ் மைதானத்தில் நண்பகல் நடைபெற்ற சமாஜ்வாதி பிரச்சாரக் கூட்டத்தில் அதிமுகவின் பொதுச்செயலாளரான ஜெயலலிதா முக்கியத் தலைவராகக் கலந்து கொண்டார்.
இந்த மேடையில் முலாயம்சிங்குடன் தெலுங்குதேசத்தின் சந்திரபாபு நாயுடு, கர்நாடகா விகாஸ் கட்சியின் பங்காரப்பா, தேசிய லோக் தளத்தின் ஓம் பிரகாஷ் சவுதாலா, சமாஜ்வாதி எம்பிக்களான அமர்சிங், ஜெயாபச்சன், ஜெயபிரதா காங்கிரசிலிருந்து வெளியேறிய எம்பிக்கள் நட்வர்சிங் மற்றும் உபைதுல்லா ஆஷ்மி, ஆகியோரும் கலந்து கொண்டனர். வழக்கமான ’கட் அவுட்’ மற்றும் சுவரொட்டிகள் எதுவும் இன்றி ஜெயலலிதா கலந்து கொண்ட முதல் கூட்டமாக இது கருதப்படுகிறத
ு. இதில், சில அதிமுக கொடிகள் மட்டும் ஆங்காங்கே பறந்தன. இந்தக் கூட்டத்திற்காக ஜெயலலிதா சென்னையிலிருந்து தனி விமானத்தில் வந்து திரும்பினார். மற்ற கட்சிக்காக ஜெயலலிதா பிரச்சாரம் செய்த ஒரே கூட்டமாகவும் இது இருக்க வாய்ப்புகள் உள்ளன.
இந்த கூட்டத்தில் முதன் முறையாக இந்தியில் பேசிய ஜெயலலிதா கூறுகையில். ‘எனது 25 வருட அரசியல் வரலாற்றில் உத்தரப் பிரதேசம் வருவதும், இந்தியில் பேசுவதும் முதன் முறை. எனது பேச்சில் தவறு இருந்தால் மன்னிக்கவும்.‘ என தனது பேச்சின் துவக்கத்திலேயே கேட்டுக் கொண்டார். ஆனால், தவறு எதுவும் இன்றி தென் இந்தியருக்கே உரிய தனி பாணியில் (சுத்தமான இந்தி) இருந்த ஜெயாலலிதாவின் பேச்சை உத்தரப் பிரதேச வாசிகள் வெகுவாக கைதட்டி ரசித்தனர்.
அதே போல், முழுக்க, முழுக்க காங்கிரசை குறி வைத்து இருந்த அவரது பேச்சின் சாரமும் உத்தரப் பிரதேச வாசிகளிடையே பலத்த வரவேற்பை பெற்றிருந்தது. இவரது பேச்சுக்கு இடையில் ‘ஜெயலலிதா சிந்தாபாத்!‘ என கூட்டத்தினர் இட்ட கோஷத்தால் அவர் தன் பேச்சை நிறுத்த வேண்டியதாயிற்று. இதை கேட்டு மேடையில் அமர்ந்திருந்த முலாயம்சிங் தர்மசங்கடத்துடன் நெளிந்தபடி இருந்தார்.
இங்கு சுமார் 15 நிமிடம் பேசியவர், திமுகவுடன் கூட்டணி வைத்த காங்கிரசை சந்தர்ப்பவாதிகள் என குறிப்பிட்டவர், காங்கிரசை ஒரு மதவாதக் கட்சி எனவும், அது சிறுபான்மையினருக்காக எதுவும் செய்யவில்லை எனவும் குற்றம் சாட்டினார். ‘சமீபத்தில் நரசிம்மராவ் மீது ராகுல் விமர்சனம் செய்தார். பொதுவாக இறந்தவர்களை விமர்சிப்பது நம் நாட்டுக் கலாச்சாரம் இல்லை
. அது வெளிநாட்டு கலாச்சாரம். ஆனால், இதை ராகுல் செய்ததற்குக் காரணம், அவர் வெளிநாட்டவர் போல் வளர்க்கப்பட்டிருக்கிறார் என்பதனால்தான்.‘ என இதுவரை உத்தரப் பிரதேசத்தில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் யாருமே வைக்காத கடுமையான விமர்சனத்தை ராகுல் மீது வைத்தார் ஜெயலலிதா. இதைக் கண்டு மேடையில் அமர்ந்திருந்த தலைவர்கள் ஒரு நிமிடம் ஆச்சரியத்துடன் அவரை நிமிர்ந்து பார்த்தனர். உத்தரப் பிரதத்தில் முலாயமிற்கு மற்ற எதிர்கட்சிகளாக பாஜக மற்றும் மாயாவதியின் பகுகுஜன் சமாஜ் கட்சி இருந்தும், ஏனோ ஜெயலலிதா கடைசி வரை காங்கிரசை மட்டும் குறி வைத்து பேசினார்.
மத்திய அரசு தரும் நிதிக்கு முலாயம்சிங் கணக்கு காட்ட வேண்டும் என்பது உத்தரப் பிரதேசத்தில் பிரச்சாரம் செய்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பிரியங்கா வதோரா மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் குற்றச்சாட்டுகளை வைத்திருந்தனர். இதற்கு பதிலளிக்கும் வகையில் பேசிய ஜெயலலிதா, ‘மத்திய அரசு இது போன்ற நிதியை மாநில அரசுகளுக்கு ஒன்றும் பிச்சையாகத் தரவில்லை. அது மக்களின் வரிப்பணம் அதை வாங்குவது மாநில அரசுகளின் உரிமை.
சோனியாவை நான் கேட்கிறேன், இதே மக்கள் பணத்தை வெளிநாட்டு வங்கியில் போட்டு வைத்திருக்கும் அவரது உறவினரான குத்ரோக்கியிடம் கணக்கு கேட்பாரா? அவரை ஏன் இன்னும் கைது செய்து இந்தியா கொண்டு வரவில்லை.‘ என கூறினார். இதை கேட்டு மேடையின் அருகில் கீழே அமர்ந்திருந்த சமாஜ்வாதி கட்சியின் நிர்வாகிகள், ‘காங்கிரசுக்கு இப்படி ஒரு சரியான பதிலை முலாயம் சிங் கூட தந்ததில்லை!‘ என ஆச்சரியப்பட்டனர்.
கூட்டத்திற்கு பின் ஜெயலலிதாவை வழியனுப்ப மேடையில் இருந்த அனைத்துத் தலைவர்களும் இறங்கியது கூட்டத்தினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியது. சுமார் 15 நிமிடம் உரையாற்றிய ஜெயலலிதா, துவக்கத்தில் முலாயமை தவிர மேடையில் இருந்த எந்தத் தலைவரின் பெயரையும் குறிப்பிடவில்லை. இவருக்கு முன், கடைசியாக உத்தரப் பிரதேசத்தில் பேசிய தமிழகத்தின் அரசியல் கட்சித் தலைவராக வைகோ இருந்தார். இவர் 2002-ல் லக்னோவில் நடந்த தேசிய முன்னணி கூட்டத்தில் பேச வந்த போது பின்புறம் உள்ள வரிசையில் அமர்த்தப்பட்டார். ஆனால், முலாயமின் இடதுபுறம் அமர்ந்த ஜெயலலிதாவுக்கு மற்ற தலைவர்களை விட அதிக முக்கியத்துவம் இருந்தது குறிப்பிடத்தக்கது.