

பண மதிப்பு நீக்க விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடிக்கு அளித்த ஆதரவால் தனது அரசியல் நண்பர்களை இழந்து நிற்கிறார் பிஹார் முதல்வர் நிதிஷ்குமார். இந்த நட்பை மீண்டும் நிலைநிறுத்த அவர் தனது செயல்பாட்டில் விரைவில் மாற்றம் செய்ய திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் நரேந்திர மோடி கடந்த மாதம் 8-ம் தேதி அறிவித்தபோது, பிரதமரின் முடிவை ஆதரிப்பதாக நிதிஷ்குமார் கூறினார். இதையடுத்து அவருக்கு நெருங்கிய அரசியல் நண்பர்களாக இருந்த, திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அர்விந்த் கேஜ்ரிவால் மற்றும் கம்யூனிஸ்ட் தலைவர்கள் பலர் அவரிடம் இருந்து விலகத் தொடங்கினர். இவர்களால் நிதிஷ்குமார் தற்போது கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறார்.
அடுத்த மக்களவைத் தேர்தலில் மூன்றாவது கூட்டணியின் பிரதமர் வேட்பாளராகவும் பேசப்பட்டு வந்த நிதிஷுக்கு இதனால் பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளது. பிஹாரில் லாலு பிரசாத் மற்றும் காங்கிரஸ் கட்சியுடன் நிதிஷ்குமார் கூட்டணி அமைத்துள்ள நிலையில், நிதிஷ் மீது லாலுவும் ராகுல் காந்தியும் அதிருப்தி காட்டி வருவதாகக் கூறப்படுகிறது. எனவே இவர்களின் நட்பை மீண்டும் நிலைநிறுத்த நிதிஷ்குமார் திட்டமிட்டு வருவதாககக் கூறப்படுகிறது.
இதுகுறித்து ‘தி இந்து’விடம் பிஹார் அரசியல் வட்டாரத்தில் கூறும்போது, “பண மதிப்பு நீக்க விவகாரத்தில் பிரதமர் கேட்ட 50 நாள் அவகாசம் டிசம்பருடன் முடிகிறது. ஆனால் மக்கள் படும் அவதி அதற்குள் முடிவது போல் தெரியவில்லை. நிதிஷ் கறுப்புப் பணத்துக்கு எதிரானவர் என்றாலும் அதற்கு எதிரான பிரதமரின் செயல்பாடுகள் குறித்து ஜனவரி முதல் விமர்சிக்கத் திட்டமிட்டுள்ளார். இதை தன்னை சந்திக்க வரும் நண்பர்கள் மற்றும் தனது கட்சி நிர்வாகிகளிடம் அவர் கூறி வருகிறார். டிசம்பருக்கு பிறகு பிரதமருக்கு எதிரான தனது பழைய நிலைக்கு நிதிஷ் திரும்புவதற்கான வாய்ப்புகள் தெரிகின்றன” என்று தெரிவித்தனர்.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றிருந்த நிதிஷ், கடந்த மக்களவை தேர்தலில் பிரதமர் வேட்பாளராக மோடி முன்னிறுத்தப்பட்டதை எதிர்த்து அக்கூட்டணியில் இருந்து வெளியேறினார். இதையடுத்து கடந்த ஆண்டு பிஹார் தேர்தலில் மெகா கூட்டணி அமைத்து வெற்றி பெற்றார். அவரது பதவியேற்பு விழாவில், எந்த மாநில முதல்வருக்கும் இல்லாத வகையில் பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்று சிறப்பித்தனர். இதை அவர் பிரதமருக்கு அளித்த ஆதரவால் கெடுத்துக் கொண்டார். இதை சரிசெய்யும் வகையில் இனி நிதிஷின் விமர்சனம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பாஜக கூட்டணிக்கு நிதிஷ் செல்லவிருப்பதாக லாலு கட்சித் தலைவர்கள் புகார் கூறிவந்த நிலையில், இதற்கும் நிதிஷ் முற்றுப்புள்ளி வைக்க விரும்புவதாகக் கூறப்படுகிறது. பிரதமரின் பண மதிப்பு நீக்க அறிவிப்புக்கு, நிதிஷுக்கு முன்பாக ஒடிசா முதல்வர் பிஜு பட்நாயக் முதல்நபராக ஆதரவளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.