பேட்டரியுடன் ப்ரெஷர் குக்கர் பறிமுதல்; மங்களூரு சம்பவம் தீவிரவாத செயல்: கர்நாடக டிஜிபி தகவல்

சம்பவ இடம்.
சம்பவ இடம்.
Updated on
1 min read

மங்களூரு: கர்நாடக மாநிலம் மங்களூருவில் நேற்று மாலை ஆட்டோ ஒன்றில் நடந்த வெடிவிபத்து தற்செயலானது அல்ல அது தீவிரவாதச் செயல் என்று கர்நாடக டிஜிபி பிரவீன் சூட் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவத்தில், மத்திய புலன் விசாரணை அமைப்புகள் மாநில காவல்துறைக்கு விசாரணையில் உதவி வருவதாக உள்துறை அமைச்சர் அரகா ஞானேந்திரா தெரிவித்துள்ளார்.

இது குறித்து கர்நாடகா டிஜிபி தனது ட்விட்டர் பக்கத்தில், "உறுதியாகிவிட்டது. நடந்தது விபத்து அல்ல. அது தீவிரவாத செயல். பலத்த சேதம் விளைவிக்கும் நோக்கத்துடன் நடத்தப்பட்டுள்ளது. கர்நாடக போலீஸார் மத்திய அமைப்புகளுடன் இணைந்து விசாரித்து வருகின்றனர்" என்று பதிவிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், "இந்த தாக்குதலில் காயமடைந்தவர் பேசும் சூழலில் இல்லை. இதுவரை நடந்த விசாரணையில் இது தீவிரவாத தாக்குதல் என்பது உறுதியாகியுள்ளது. உறுதியான தகவல்கள் இன்னும் ஒன்றிரண்டு நாட்களில் கிடைக்கும்" என்றார்.

நிகழ்விடத்திலிருந்து போலீஸார் பேட்டரிகளுடன் கூடிய ப்ரெஷர் குக்கர் ஒன்றை மீட்டுள்ளனர். ஆட்டோவில் பயணம் செய்த ஓட்டுநரும், பயணியும் காயமடைந்து சிகிச்சையில் உள்ளனர். இந்த சம்பவம் ஒரு கட்டுமான பணியிடத்தின் அருகே நடந்துள்ளது.

சம்பவ இடத்தில் பெறப்பட்ட சிசிடிவி காட்சிகளில் ஆட்டோரிக்‌ஷா திடீரென தீப்பற்றுவதும் பின்னர் அது வெடிப்பதும் பதிவாகியுள்ளது.

இது குறித்து மாநில காவல் ஆணையர் என்.சசிகுமார், "சிகிச்சையில் உள்ள ஆட்டோ ஓட்டுநர் தானே முதன்முதலில் ப்ரெஷர் குக்கரில் இருந்து தீ பிடிப்பதைப் பார்த்ததாகக் கூறியுள்ளார். ஓட்டுநரும், பயணியும் சிகிச்சையில் உள்ளனர். மக்கள் ஏதும் பதற்றப்பட வேண்டாம். மக்கள் யாரும் வதந்திகளைப் பரப்ப வேண்டாம். அவர்கள் இருவரும் கூடுதல் தகவல் அளித்த பின்னர் அதை நாங்கள் பகிர்கிறோம்" என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in