Published : 20 Nov 2022 04:25 AM
Last Updated : 20 Nov 2022 04:25 AM

தமிழை காக்க வேண்டியது இந்தியர் கடமை - வாரணாசி காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேச்சு

வாரணாசியில் நேற்று காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சியைத் தொடங்கிவைத்த பிரதமர் நரேந்திர மோடி.படம்: பிடிஐ

வாரணாசி: உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சியை பிரதமர் மோடி நேற்று தொடங்கிவைத்துப் பேசும்போது, "தமிழ் மொழியைக் காக்க வேண்டியது இந்தியர்கள் அனைவரின் கடமை" என்றார். தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சிகள் தொடர்ச்சியாக ஒரு மாதத்துக்கு நடைபெற உள்ளன.

மத்திய அரசின் கல்வித் துறை சார்பில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க, தமிழகத்தில் இருந்து 2,500-க்கும் மேற்பட்டோர் வாரணாசி சென்றனர்.

தமிழக பாரம்பரிய உடையான வேட்டி, சட்டை அணிந்து பங்கேற்ற பிரதமர், நிகழ்ச்சியைத் தொடங்கிவைத்துப் பேசியதாவது: நாட்டின் கலாச்சாரத் தலைநகரான காசியின் கலாச்சாரமும், நாட்டின் தொன்மையான தமிழ்க் கலாச்சாரமும் ஒன்றிணைந்துள்ளன.

காசியும், தமிழகமும் காலத்தால் அழியாத கலாச்சாரம் மற்றும் நாகரிகத்தின் மையங்களாகும். மேலும், உலகின் மிகப் பழமையான சம்ஸ்கிருதம், தமிழ் ஆகிய மொழிகளின் மையமாகும். காசிக்கு விஸ்வநாதர் பெருமை சேர்க்கிறார். தமிழகத்தின் ராமேசுவரத்துக்கு ராமநாத சுவாமி பெருமை சேர்க்கிறார். காசியும், தமிழகமும் சிவமயமாக, சக்திமயமாகத் திகழ்கின்றன.

இந்திய ஆன்மிகத்தின் பிறப்பிடமாக காசியும், தமிழகமும் திகழ்கின்றன. காசி நகரம் துளசிதாசரின் பூமியாகும். தமிழகம் திருவள்ளுவரின் பூமியாகும். காசியை நிர்மாணித்ததில் தமிழர்களுக்கும் பெரும் பங்கு உள்ளது.

சுதந்திரப் போராட்ட வீரரும், கவிஞருமான பாரதி காசியில் பல ஆண்டுகள் தங்கியிருந்தார். பாரதியைப் போன்ற பலர் காசியையும், தமிழகத்தையும் இணைத்தனர்.

உலகின் பழமையான மொழிகளில் ஒன்று தமிழ். இதில் இந்தியர்கள் அனைவரும் பெருமிதம் கொள்ளலாம். தமிழைக் காக்க வேண்டியது இந்தியர்கள் அனைவரின் கடமை. இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

இந்த நிகழ்ச்சியில், உத்தர பிரதேச ஆளுநர் ஆனந்தி பென் படேல், முதல்வர் யோகி ஆதித்யநாத், மத்திய அமைச்சர்கள் தர்மேந்திர பிரதான், எல்.முருகன், முன்னாள் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தொடர்ச்சியாக ஒரு மாதத்துக்கு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

செம்மொழி தமிழாய்வு நிறுவனம் இந்தி, உருது, அரபி உள்ளிட்ட 13 மொழிகளில் மொழி பெயர்த்துள்ள திருக்குறள் நூல்களை பிரதமர் வெளியிட்டார். தமிழர்களின் கலாச்சாரம் குறித்த குறும்படத்தையும் பார்த்தார்.

பிரதமருக்கு இளையராஜா புகழாரம்: தொடக்க விழாவில் பிரபல இசையமைப்பாளரும், எம்.பி.யுமான இளையராஜாவின் இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது. ஜனனி, ஜனனி... என்ற பாடலை இளையராஜா பாடினார். தொடர்ந்து, `நான் கடவுள்' படத்தில் இடம்பெற்ற "ஓம் சிவோஹம்" பாடலை, தனது குழுவினருடன் சேர்ந்து அவர் பாடினார். அவரது இசைக் கச்சேரியை பிரதமர் மோடி, உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் மெய்மறந்து ரசித்தனர்.

நிகழ்ச்சியில் இளையராஜா பேசும்போது, "அறிவியல் முன் னேற்றம் இல்லாதபோதே, காசி நகர்ப் புலவர் பேசும் உரைதான் காஞ்சியில் கேட்க கருவி செய்வோம் என்று பாரதி பாடினார். கர்நாடக சங்கீத மாமேதை என்று போற்றப்படும் மூம்மூர்த்திகளில் ஒருவரான முத்துசாமி தீட்சிதர் காசியில் பல இடங்களில் பாடியுள்ளார். பெருமை மிகுந்த காசி நகரில் தமிழ்ச் சங்கமத்தை நடத்த வேண்டுமென்று பிரதமர் மோடிக்கு தோன்றியது குறித்து வியக்கிறேன்" என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x