Published : 19 Nov 2022 06:27 PM
Last Updated : 19 Nov 2022 06:27 PM

காசி தமிழ்ச் சங்கமம் | “தமிழ் மொழியைக் காக்க வேண்டியது இந்திய மக்கள் அனைவரின் கடமை” - பிரதமர் மோடி

வாரணாசி: பழம்பெரும் மொழியான தமிழைக் காக்க வேண்டிய கடமை, இந்திய மக்கள் அனைவருக்கும் இருக்கிறது” என்று காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்வைத் தொடங்கி வைத்த பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

உத்தரப் பிரசேத்தின் வாரணாசியில் நடைபெறும் ஒரு மாத நிகழ்ச்சியான ‘காசி தமிழ்ச் சங்கமம்’ நிகழ்வை சனிக்கிழமை பிரதமர் நரேந்திர மோடி முறைப்படி தொடங்கி வைத்தார். இந்நிகழ்வு டிசம்பர் மாதம் 16-ம் தேதி வரை நடைபெற உள்ளது. காசிக்கும், தமிழகத்துக்கும் இடையேயான பண்டைய தொடர்புகளை புதுப்பித்துக் கொள்ளும் விதமாகவும், இளைய தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் வகையிலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த நிகழ்வைத் தொடங்கி வைத்து பிரதமர் மோடி ஆற்றிய உரை:

“உலகின் பழமையான நகரம் காசி. காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சியின் மூலம் தமிழகத்தில் இருந்து காசிக்கு வந்திருக்கும் எனது விருந்தினர்கள் அனைவரையும் வரவேற்கிறேன். நமது நாட்டில் பல்வேறு சங்கம பெருவிழாக்கள் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. நதிகளின் சங்கமம், கொள்கைகளின் சங்கமம், ஞானம் மற்றும் விஞ்ஞானத்தின் சங்கமம், கலாச்சாரத்தின் சங்கமம் என அனைத்து சங்கமங்களும் விழாக்களாகக் கொண்டாடப்படுகின்றன. வேற்றுமையில் ஒற்றுமை கொண்டது நமது நாடு. அதைக் கொண்டாடவே காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சி. காசியைப் போலவே தமிழ்நாடும் பழமை வாய்ந்தது. பழம்பெரும் கலாச்சாரத்தைக் கொண்டது. இவை இரண்டின் சங்கமமும், காசி தமிழ்ச் சங்கமம் எனும் ஒரு மாத கால நிகழ்ச்சியின் மூலம் கொண்டாடப்பட இருக்கிறது.

ஒரே உண்மை பல ரூபங்களில் வெளிப்படுகிறது என்பது நமது நாட்டின் கொள்கை. அப்படித்தான் காசியும் தமிழ்நாடும் இருக்கின்றன என்பது எனது எண்ணம். காசி, தமிழ்நாடு இரண்டுமே கலாச்சாரத்தில் சிறந்து விளங்குபவை. இரண்டுமே தமிழ், சமஸ்கிருதம் இரண்டிலும் சிறந்து விளங்குபவை. காசிக்கு விஸ்வநாதர் பெருமை சேர்க்கிறார். தமிழகத்திற்கு ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாத சுவாமி பெருமை சேர்க்கிறார். இரண்டுமே சிவ மயமானது, சக்தி மயமானது. நமது நாட்டின் ஏழு புண்ணிய தீர்த்தங்களில் ஒன்று காசி; மற்றொன்று காஞ்சி. காசியும், தமிழ்நாடும் கலை, கலாச்சாரம், பண்பாடு ஆகியவற்றில் சிறந்து விளங்குபவை. காசியில் பட்டு சிறந்து விளங்குவதைப் போலவே, தமிழ்நாட்டில் காஞ்சிப் பட்டு சிறந்து விளங்குகிறது. காசிக்கு துளசிதாசர் என்றால், தமிழ்நாட்டிற்கு திருவள்ளுவர்.

தமிழக திருமண விழாக்களில் காசி யாத்திரை எனும் ஒரு சடங்கு இருக்கிறது. வாழ்க்கையில் ஒரு புதிய அத்தியாயத்தை தொடங்கும் வைபவத்தில் இந்த காசி யாத்திரை சடங்கு முக்கியமானதாக இருக்கிறது. இப்படி இரண்டுக்கும் இடையே நீண்ட நெடிய பந்தம் இருக்கிறது. காசியை நிர்மானித்ததில், வளர்த்ததில் தமிழர்களுக்கு பெரும் பங்கு உண்டு. காசியில் உள்ள பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றியவர் தமிழகத்தைச் சேர்ந்த குடியரசு முன்னாள் தலைவர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன். ராஜேஷ்வரி சாஸ்திரி என்பவர் காசியில் வேதம் வளர பாடுபட்டிருக்கிறார். பட்டாராம் சாஸ்திரி என்பவர் காசியில் ஆலயம் அமைத்திருக்கிறார்.

காசியில் அரிச்சந்திர காட் என்ற படித்துறைக்கு அருகே காசி காமகோடீஸ்வரர் திருக்கோயில் உள்ளது. இது தமிழ்நாட்டுக் கோயில். கேதார்காட் பகுதியில் 200 ஆண்டு பழமை வாய்ந்த குமாரசாமி மடம் உள்ளது; மார்க்கண்டேய ஆசிரமம் உள்ளது. அனுமான் காட் பகுதியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பலர் வசிக்கிறார்கள். தமிழ்நாட்டைச் சேர்ந்த மகாகவி சுப்ரமணிய பாரதி காசியில் பல ஆண்டுகாலம் வாழ்ந்திருக்கிறார்; இங்கே படித்திருக்கிறார். பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் பாரதியார் பெயரில் ஓர் இருக்கையை ஏற்படுத்த இருக்கிறது.

நாம் காலையில் எழுந்ததும் சொல்லும் ஒரு ஸ்லோகத்தில் நாடு முழுவதும் உள்ள 12 ஜோதிர்லிங்கங்களின் பெயர்கள் இருக்கின்றன. இதேபோல், பூஜை செய்யும்போதும், குளிக்கும்போதும் நாம் ஒரு மந்திரம் சொல்கிறோம். 'கங்கேச யமுனே சைவா கோதாவரி சரஸ்வதி நர்மதே சிந்து காவேரி ஜலேஸ்மின் சன்னிதிங் குரு' என்ற அந்த மந்திரத்தின் பொருள் என்னவென்றால், இந்தப் புனித நதிகள் அனைத்தின் ஆசிர்வாதமும் நமக்கு கிடைக்கட்டும் என்பதுதான். இது நமது நாட்டின் ஒற்றுமையையும் பாரம்பரியத்தையும் வெளிப்படுத்துகிறது.

நாடு சுதந்திரம் அடைந்த பிறகு தேச ஒற்றுமைக்கான பணிகளை செய்து நாட்டை வளப்படுத்தி இருக்க வேண்டும். தேச ஒற்றுமையை வலுப்படுத்தும் நோக்கிலேயே இப்போது இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விஷ்ணு புராணத்தில் ஒரு ஸ்லோகம் உள்ளது. வடக்கே இமாலயத்தில் இருந்து தெற்கே குமரி வரை உள்ள நிலப்பகுதி ஒற்றுமை மற்றும் வேற்றுமைகளுடன் பலமாக இருக்கிறது என்கிறது அந்த ஸ்லோகம். தமிழ் இலக்கியத்தில் காசி நகர் பற்றி இருக்கிறது. கலித்தொகையிலும், திருப்புகழிலும் காசி குறிப்பிடப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் தென்காசி எனும் பெயரில் ஒரு நகரம் இருக்கிறது. தமிழகத்தைச் சேர்ந்த குமர குருபர ஸ்வாமிகள், காசியை கர்ம பூமியாகக் கொண்டு இங்கே வாழ்ந்துள்ளார். பிறகு, தஞ்சாவூர் மாவட்டத்திற்குச் சென்று அங்கு காசி விஸ்வநாதர் ஆலயத்தை நிறுவி இருக்கிறார்.

தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை இயற்றியவர் மனோண்மணியம் சுந்தரனார். இவரது குருநாதர் கோடகநல்லூர் சுந்தரஸ்வாமிகள். இவர், காசியின் மணிகர்ணிகா காட் பகுதியில் வாழ்ந்து, இங்கே கோயில் அமைத்திருக்கிறார். தமிழ்நாட்டைச் சேர்ந்த மகான்கள் ராமானுஜரும், ஆதிசங்கரரும் நாட்டில் ஒற்றுமை உணர்வை ஏற்படுத்தி இருக்கிறாரகள். அவற்றை நாம் பாதுகாத்து வளர்க்க வேண்டும். உலக நாடுகள் பலவும் தங்களிடம் உள்ள பழமை வாய்ந்தவற்றை பேணிப் பாதுகாத்து, உலகிற்கு அவற்றை வெளிச்சம்போட்டு காட்டுகின்றன.

எகிப்தின் பிரமிடுகள், இத்தாலியின் கொலோசியம் போன்றவற்றை உலகம் அறிந்திருக்கிறது. இப்படி இந்தியாவிலும் பழைமையான ஒரு விஷயம் இருக்கிறது. அது தமிழ் மொழி. இதன் பழம்பெருமையை நாம் உலகிற்கு எடுத்துச் சொல்ல வேண்டும். இந்தியாவில் இப்படி ஒரு பழைமையான மொழி இருக்கிறது என்ற ஆச்சரியத்தை உலக மக்கள் கேட்க வேண்டும். தமிழ் நமது பெருமை. தமிழ் மொழியை காக்க வேண்டியது இந்திய மக்கள் ஒவ்வொருவரின் கடமை. தமிழ் மொழியை நாம் காக்கத் தவறினால் அது நாட்டிற்கே பேரிழப்பாகிவிடும். மொழி பேதங்களை கைவிட்டுவிட்டு நாம் தமிழ் மொழியை காத்திட வேண்டும்.

காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கும் அனைவருக்கும் இது வார்த்தைகளால் சொல்ல முடியாத ஓர் அனுபவமாக இருக்கும். இந்த அனுபவத்தை காசி மக்கள் அளிப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. இந்த அனுபவத்துடன் நீங்கள் தமிழ்நாடு செல்வீர்கள். காசி தமிழ்ச் சங்கமம் போல் நாட்டின் பல மாநிலங்களிலும் சங்கமங்கள் நடைபெற வேண்டும். தெற்கே இருக்கும் மக்கள் வடக்கே சென்றுவர வேண்டும். வடக்கே இருக்கும் மக்கள் தெற்கே சென்றுவர வேண்டும். நாட்டின் ஒற்றுமையைக் காக்க இத்தகைய சங்கமங்களால்தான் முடியும். எனவே இவற்றை நாம் முன்னெடுத்துச் செல்வோம்” என்று பிரதமர் மோடி பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x