Published : 19 Nov 2022 03:40 PM
Last Updated : 19 Nov 2022 03:40 PM

காசி தமிழ்ச் சங்கமம் | “பிரதமர் மோடியின் எண்ணத்தைக் கண்டு வியந்து மகிழ்கிறேன்” - இளையராஜா

காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சியில் இளையராஜா

வாரணாசி: புண்ணிய பூமியான காசியில் தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சியினை நடத்த வேண்டும் என்று தோன்றிய பிரதமர் மோடியின் எண்ணத்தினைக் கண்டு வியந்து மகிழ்கிறேன் என்று பிரபல இசையமைப்பாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான இளையராஜா தெரிவித்துள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலம், வாரணாசியில் உள்ள பனாரஸ் பல்கலையில் மத்திய அரசின் கலாசாரத்துறை சார்பில் காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இந்திய சுதந்திரத்தின் 75 வது ஆண்டு நிறைவு கொண்டாட்டத்தை ஒட்டி நடத்தப்படும் இந்த நிகழ்ச்சி அடுத்த மாதம் 16ஆம் தேதி வரை நடைபெறும். இந்த நிகழ்ச்சியினை பிரதமர் மோடி இன்று (சனிக்கிழமை) முறைப்படி தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் பிரபல இசையமைப்பாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான இளையாராஜா கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் அவர் பேசியாதாவது: "விழாவில் பங்கேற்றுக் கொண்டிருக்கும் தமிழ் பெருமக்களே.. காசிவாசிகளே, உலகம் வியக்க நடந்து கொண்டிருக்கும் இந்த காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்வுகளை காண வந்திருக்கும் திரளான பெருமக்களே உங்கள் அனைவருக்கும் எனது மகிழ்ச்சியான வணக்கத்தினை தெரிவித்துக் கொள்கிறேன். காசி நகருக்கும் தமிழுக்கும் எவ்வளவு தொடர்பு இருக்கிறது என்பதை இங்கே விளக்கிப் பேசிக்கொண்டிருந்தார்கள்.

பாரதியார் இங்கே இரண்டு வருடம் தங்கிப் படித்திருக்கிறார். இங்கு படித்து அவர் கற்றுக்கொண்ட விசயங்களை, இங்குள்ள புலவர் பெருமக்களின் விவாதங்களை நேரில் கண்டு, கேட்டு தெரிந்து கொண்ட பாரதியார், இந்தியாவில் எந்தவிதமான முன்னேற்றமும் இல்லாத நேரத்தில், காசி நகர் புலவர்களின் விவாதங்களை கேட்க ஒரு கருவி செய்வோம் என்று பாடியிருக்கிறார். "கங்கை நதிப்புறத்து கோதுமைப் பண்டம் காவிரி வெற்றிலைக்கு மாறுகொள்ளுவோம். வங்கத்தில் ஓடிவரும் நீரின் மிகையால் மையத்து நாடுகளில் பயிர் செய்வோம்" என்று நதி நீர் இணைப்பு என்ற ஒன்று வரும் முன்பாகவே தனது 22 வயதில் அதைப்பற்றிப் பாடிவிட்டார்.

அப்படியான பாரதியார் தனது ஒன்பது வயது முதல் பதினொருவயது வரை இரண்டு ஆண்டுகள் இங்கே இருந்து பயின்று அறிவு பெற்றிருக்கிறார் என்பது தமிழ் மக்களுக்கு மிகவும் அரிய விஷயமாகும். அதே போல் நீங்கள் அறியாத இதுவரை குறிப்பிடப்படாத விசயத்தை இங்கே சொல்ல விரும்புகிறேன். கபீர் “தோஹா"பாடினார் இரண்டு அடிகளில் பாடுவது அது. அங்கே தமிழில் திருவள்ளுவர் இரண்டே அடிகளில் திருக்குறள் என்ற நூலை இயற்றினார். “தோஹா"வில் எட்டு சீர்கள் அமைந்திருக்கின்றன. திருக்குறளில் ஏழு சீர்கள்தான். முதல் அடி நான்கு சீர், இரண்டாவது அடி மூன்று சீர். இதனையும் நாம் ஒப்பிட்டு பார்க்க வேண்டும். கபீர்தாஸ் ஆன்மிகத்தைப் பற்றி பாட, திருவள்ளுவர் உலகப் பொதுமறையாக, அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப்பால் என்று முப்பால்களாக 1330 பாடல்களாக அதனை எழுதினார்.

இன்னொரு விஷயத்தையும் இங்கே சொல்கிறேன். முத்துசாமி தீட்சிதர் கர்நாடக சங்கீதத்தின் மாமேதை என்று போற்றப்படும் மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துசாமி தீட்சிதர் இங்கே வந்து கங்கை நதியில் மூழ்கி எழும்போது சரஸ்வதி தேவி அவர் கையில் வீணை ஒன்றை பரிசளித்திருக்கிறார் அந்த வீணை இன்னமும் இருக்கிறது. அருங்காட்சியகத்திலே வைக்கப்பட்டிருக்கிறது என்பதையும் இங்கே தெரிவித்துக்கொள்கிறேன்.

இப்படிபட்ட பெருமை மிகுந்த இந்த காசி நகரிலே தமிழ்ச் சங்கமத்தை நடத்த வேண்டும் என்ற எண்ணம் நமது பிரதமர் அவர்களுக்கு எப்படித் தோன்றியது என்பதை எண்ணி மிகவும் வியந்து வியந்து கொண்டிருக்கிறேன். (இப்போது மோடி ஜி என அழைக்கும் இளையராஜா அவரிடம் ஆங்கிலத்தில் பேசுகிறார்.) மோடி ஜி என்னால் என்னுடைய உணர்வுகளை முழுமையாக வெளிப்படுத்த முடியவில்லை. இந்த தமிழ்ச் சங்கமத்தை இந்த புண்ணிய பூமியான காசியிலே நடந்த வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு எப்படி வந்தது என்பதை எண்ணி நான் வியந்து மகிழ்கிறேன். எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்கு நீண்ட ஆயுளும், நிறைந்த புகழும் வழங்க வேண்டும் என்று வாழ்த்தி விடைபெறுகிறேன். வணக்கம்." இவ்வாறு இளையராஜா பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x