Published : 19 Nov 2022 01:19 PM
Last Updated : 19 Nov 2022 01:19 PM

தொடங்கும் திட்டங்களை கிடப்பில்போடும் சகாப்தம் மறைந்துவிட்டது - பிரதமர் நரேந்திர மோடி

விழாவில் பிரதமர் நரேந்திர மோடி

இட்டாநகர் (அருணாச்சல் பிரதேசம்): தொடங்கும் திட்டங்களை காலம் தாழ்த்தி நிறைவேற்றுவது, முடிக்காமல் விட்டுவிடுவது ஆகியவற்றுக்கான சகாப்தம் மறைந்துவிட்டது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

அருணாச்சல் பிரதேசத்தின் முதல் கிரீன்ஃபீல்டு விமான நிலையத்தை தலைநகர் இட்டாநகரில் பிரதமர் நரேந்திர மோடி இன்று (சனிக்கிழமை) தொடக்கிவைத்தார். மேலும், இட்டாநகரில் 600 மெகாவாட் திறன் கொண்ட கமெங் நீர்மின் நிலையத்தை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார். மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜூ, அருணாச்சல் பிரதேச முதல்வர் பெமா காண்டு உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய கிரண் ரிஜிஜூ, அருணாச்சல் பிரதேசத்தின் தலைநகரில் விமான நிலையம் அமைக்க வேண்டும் என்பது கனவாக இருந்து வந்ததாகவும், பிரதமர் நரேந்திர மோடியின் முயற்சியின் காரணமாக அந்த கனவு தற்போது நனவாகி இருப்பதாகவும் கூறி மகிழ்ச்சி தெரிவித்தார். இந்த விமான நிலையம் அமைவதில் பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு கவனம் செலுத்தியதாகவும் அவர் தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பேசுகையில், "அடிக்கல் நாட்டிய திட்டப்பணிகளை துவக்கி வைக்கும் பணி கலாசாரத்தை நாங்கள் கொண்டு வந்துள்ளோம் என்பதை நீங்கள் அறிவீர்கள். அரசுத் துறையில், பணிகளில் தேவையற்ற நிதானம், பணிகளை தாமதப்படுத்துவது, பணிகளை முடிக்காமல் விட்டுவிடுவது எனும் சகாப்தம் மறைந்துவிட்டது. இங்கு விமான நிலையம் அமைக்க கடந்த 2019ல் நான் அடிக்கல் நாட்டினேன். அப்போது நாடாளுமன்றத் ​​தேர்தல் நடக்கவிருந்தது. தேர்தலை மனதில் கொண்டு மோடி அடிக்கல் நாட்டுகிறார் என்றும் விமான நிலையம் கட்டப்படாது என்றும் அரசியல் விமர்சகர்கள் உரத்த குரலில் சத்தமிட்டனர். இன்றைய நிகழ்வு அவர்களின் முகத்தில் அறைந்துவிட்டது.

சுதந்திரத்திற்குப் பிறகு வடகிழக்குப் பகுதி, வேறு சகாப்தத்திற்கு சாட்சியாக மாறியது. பல பத்தாண்டுகளாக காட்டப்பட்ட அலட்சியம் காரணமாக இப்பகுதி பாதிக்கப்பட்டது. முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் அரசு வந்தபிறகுதான் இதை மாற்றுவதற்கான முயற்சிகள் முதல் முறையாக மேற்கொள்ளப்பட்டன. வடகிழக்கு வளர்ச்சிக்காக முதல்முறையாக தனி அமைச்சகம் அமைக்கப்பட்டது. எனினும், பிறகு வந்த அரசுகள் அந்த வேகத்தை முன்னோக்கி கொண்டு செல்லவில்லை. உங்களுக்கு சேவை செய்ய நீங்கள் எனக்கு வாய்ப்பளித்தபோது மாற்றம் ஏற்படும் மற்றொரு சகாப்தம் உருவானது. வட கிழக்கு என்பது தொலைவில் உள்ள பகுதி என முந்தைய அரசுகள் கருதின. எல்லையில் உள்ள கிராமங்கள் கடைசி கிராமங்களாகக் கருதப்பட்டன. ஆனால் எங்கள் அரசாங்கம், அவற்றை முதல் கிராமமாகக் கருதியது" என்றார்.

முன்னதாக, பழங்குடியினத்தைச் சேர்ந்த மத குருமார்கள் மந்திரங்கள் சொல்ல புதிய விமான நிலையம் திறந்துவைக்கப்பட்டது. தலைநகர் இட்டாநகரில் இருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தோனி போலோ என்ற இடத்தில் இந்த விமான நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு விமான நிலையம் அமைக்கப்பட்டிருப்பதன் மூலம் இனி இங்கிருந்து பிற மாநிலங்களுக்கு விமானத்தில் பயணிக்க முடியும். அதேபோல், அருணாச்சல் பிரதேசத்தின் பிற பகுதிகளுக்கு ஹெலிகாப்டர் மூலம் பயணிக்க முடியும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x