Published : 19 Nov 2022 05:40 AM
Last Updated : 19 Nov 2022 05:40 AM

சுதந்திர போராட்ட வீரர் சாவர்க்கரை விமர்சித்த ராகுல் காந்தி மீது அவதூறு வழக்கு பதிவு

தானே: சுதந்திர போராட்ட வீரர் சாவர்க்கர் பற்றி சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மீது தானே போலீஸார் அவதூறு வழக்கு பதிவு செய்துள்ளனர்.

மகாராஷ்டிர மாநிலத்தில், தேசிய ஒற்றுமை யாத்திரையில் ஈடுபட்டுள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல், அகோலா மாவட்டம் வாதேகான் என்ற இடத்தில்பேசும்போது, ‘‘ஆங்கிலேயர்களுக்கு பயந்து கருணை மனு அனுப்பிய சாவர்க்கரைதான் பாஜகமற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பினர் போற்றுகின்றனர்’’ என்றார். இதற்கு பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் கண்டனம் தெரிவத்துள்ளன.

இது குறித்து ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா பிரிவின் தொண்டர் வந்தனா டோங்ரி என்பவர் தானே காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன் அடிப்படையில் ராகுல் காந்தி மீது ஐபிசி 500 மற்றும் 501-வது பிரிவுகளின் (அவதூறு) வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சாவர்க்கரின் பேரன் ரஞ்சித் சாவர்கரும், ராகுல் மீது மும்பை சிவாஜி பார்க் போலீஸ் நிலையத்தில் அவதூறு புகார் அளித்துள்ளார்.

இந்திரா காந்தி பாராட்டு: சாவர்க்கர் பற்றி ராகுல் காந்திகூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், சாவர்க்கரை பாராட்டி முன்னாள் பிரதமரும், ராகுல் காந்தியின் பாட்டியுமான இந்திரா காந்தி அனுப்பிய கடிதத்தை மத்திய இணையமைச்சர் ஜித்தேந்திர சிங் வெளியிட்டுள்ளார். சாவர்க்கரின் நூற்றாண்டு பிறந்த தினத்தை கொண்டாடுவதற்கான திட்டங்கள் குறித்து, அப்போதைய பிரதமர் இந்திரா காந்திக்கு, சுதந்திர வீரசாவர்க்கர் ராஷ்ட்ரிய சமர்க் அமைப்பின் செயலாளர் பண்டிட் பக்லே என்பவர் கடந்த 1980-ம் ஆண்டு கடிதம் எழுதியுள்ளார்.

அவருக்கு இந்திரா காந்தி அனுப்பிய பதில் கடிதத்தில், ‘‘ஆங்கிலேயே அரசை, வீர் சாவர்க்கர் துணிச்சலுடன் எதிர்த்தது, சுதந்திர போராட்ட இயக்கத்தில் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்தியாவின் குறிப்பிடத்தக்க புதல்வரின் நூற்றாண்டு பிறந்த தினத்தை கொண்டாடுவதற்கான திட்டங்கள் வெற்றிபெற வாழ்த்துகள்’’ என குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையில், தேச ஒற்றுமையை வலியுறுத்தி ராகுல், ‘பாரத் ஜோடோ யாத்ரா’ என்ற பெயரில் பாதயாத்திரை மேற்கொண்டுள்ளார். தற்போது அவர் மகாராஷ்ராவில் பயணம் மேற்கொண்டுள்ளார். அவரது பாதயாத்திரை நாளை ம.பி.யில் தொடங்க உள்ளது.

இந்நிலையில் ம.பி.யின் இந்தூரில் ராகுல் காந்தியின் பாத யாத்திரைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து அங்குள்ள இனிப்பு கடை ஒன்றுக்கு கடிதம் வந்துள்ளது. இதுகுறித்து இந்தூர் காவல்துறை ஆணையர் எச்.சி.மிஸ்ரா நேற்று கூறியதாவது:

அந்த கடிதத்தில் ராகுல் தலைமையிலான யாத்திரை குழுவினர் இந்தூரில் உள்ள கல்சா மைதானத்தில் வரும் 28-ம் தேதி இரவு தங்கினால், வெடிகுண்டுகள் வெடிக்கும் என அச்சுறுத்தப்பட்டுள்ளது. ராகுல் காந்தியை குறிவைத்து வெடிகுண்டை பயன்படுத்தப் போவதாக கடிதத்தில் நேரடி மிரட்டல் விடுக்கப்படவில்லை. இதுகுறித்து விசாரணையை தொடங்கியுள்ளோம். இவ்வாறு இந்தூர் காவல்துறை ஆணையர் கூறினார்.

வெடிகுண்டு மிரட்டல் தொடர்பாக அடையாளம் தெரியாத நபர்களுக்கு எதிராக போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் ம.பி. காங்கிரஸ் செயலாளர் நிலப் சுக்லா நேற்று கூறும்போது, “மிரட்டல் கடிதம் குறித்து தீவிர விசாரணை நடத்தப் பட வேண்டும். ராகுல் காந்தியின் பாதயாத்திரைக்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்த வேண்டும்” என கோரிக்கை விடுத்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x