

காஷ்மீரில் 4 மாதங்களுக்கு பிறகு நேற்று இயல்பு நிலை திரும்பியது.
காஷ்மீரில் ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாதி புர்ஹான் வானி கடந்த ஜூலை 8 ம் தேதி பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்டதை தொடர்ந்து அங்கு கலவரம் ஏற்பட்டது. பிரிவினைவாதிகளின் தொடர் போராட்ட அறிவிப்புகள், அதை முறியடிக்க பாதுகாப்பு படையினர் விதிக்கும் கட்டுப்பாடுகள் ஆகியவை காரணமாக காஷ்மீரில் இயல்பு வாழ்க்கை முடங்கியது. போராட்டக் காரர்கள் பாதுகாப்புப் படையினர் இடை யிலான மோதல்களில் அங்கு இதுவரை 80-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். பாதுகாப்புப் படைகளைச் சேர்ந்த 5 ஆயிரம் பேர் உட்பட ஏராளமானோர் காயம் அடைந்தனர். இந்நிலையில் காஷ்மீரில் கடந்த சில வாரங்களாக வன்முறை கட்டுக்குள் வந்தது.
இதையடுத்து 133 நாட்களுக்குப் பிறகு காஷ்மீரில் நேற்று இயல்புநிலை திரும்பியது. தலைநகர் ஸ்ரீநகர் மற்றும் காஷ்மீரின் பிற பகுதிகளில் அரசு அலுவலகங்கள், கடைகள், வர்த்தக நிறுவனங்கள், எரிபொருள் நிலையங்கள் திறந்திருந்தன. காஷ்மீரில் தற்போதைய அசாதாரண சூழலுக்குப் பிறகு இவை நாள் முழுவதும் செயல்பட்டது இதுவே முதல் முறையாகும்.
ஸ்ரீநகர் சாலைகளில் பெருமளவில் வாகனப் போக்குவரத்து காணப்பட்டது. பொதுப் போக்குவரத்து முழு அளவில் திரும்பியது. மக்கள் தங்கள் அன்றாடப் பணிகளில் ஈடுபட்டனர். சாலைகளில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் போக்குவரத்து காவலர்கள் நேற்று அதிக எண்ணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
பெரும்பாலான மாவட்டத் தலைநகரங் களில் இருந்தும் நேற்று இதே தகவல்கள் கிடைக்கப்பெற்றன.