

விசாகப்பட்டினம்: ஆந்திராவின் விசாகப்பட்டினம் இரும்பு ஆலையில் நேற்று மாலை ஏற்பட்ட தீ விபத்தில் 9 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 11 பேர் படுகாயமடைந்தனர். இதில் 2 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
விசாகப்பட்டினத்தில் உள்ள இரும்பு தொழிற்சாலையில் ஷிப்ட் அடிப்படையில் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், நேற்று மாலை சரியாக 4.15 மணிக்கு, எஸ்எம்எஸ் -2 கிடங்கில் இருந்து எஸ்டிசி - 3 க்கு 1500 டிகிரி வெப்பத்தில் உருக்கிய இரும்பு குழம்பை ராட்சத பக்கெட் மூலம் இடமாற்றும் பணி நடந்து கொண்டிருந்தது. அப்போது யாருமே எதிர்பாராத வகையில் அந்த இரும்பு பிழம்பு வெடித்துச் சிதறியது.
இந்த கோர விபத்தில் அப்பாராவ், பிரபாகர் ராவ், கிருஷ்ணா, ரமணா, அப்பல் ராவ், த்ரிநாத், குமார் மற்றும் அடையாளம் தெரியாத இருவர் என மொத்தம் 9 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். அதே நேரத்தில் தீப்பிழம்பு உருகி விழுந்து மேலும் 11 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் விசாகப்பட்டினம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. சம்பவ இடத்திற்கு தீயணைப்பு படையினர், போலீஸார் விரைந்து சென்று தீயை கட்டுப்படுத்தினர்.
இது குறித்து தகவல் அறிந்த ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, துணை முதல்வர் பவன் கல்யாண், அமைச்சர் லோகேஷ் ஆகியோர் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து உள்ளனர். காயமடைந்தோருக்கு உயர் சிகிச்சை அளிக்கும்படி அதிகாரிகளுக்கு முதல்வர் சந்திரபாபு நாயுடு உத்தரவிட்டு உள்ளார்.
ஆந்திர உள்துறை அமைச்சர் அனிதா சம்பவ இடத்துக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோருக்கு ஆறுதல் கூறினார். உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தார். இந்த விபத்து குறித்து உயர்நிலை விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.