

நொய்டா: டெல்லியிலிருந்து தனியார் பேருந்து ஒன்று நேற்று முன்தினம் இரவு சுமார் 35 பயணிகளுடன் உத்தர பிரதேச மாநிலம் மஹோபா நோக்கி புறப்பட்டது. இரவு 11:30 மணியளவில் பேருந்து கிரேட்டர் நொய்டா அருகே சென்று கொண்டிருந்தபோது, ஓட்டுநர் இருக்கைக்கு அருகில் திடீரென தீப்பிடித்தது.
இதையடுத்து ஓட்டுநர் பேருந்தை நிறுத்தியதும் சில பயணிகள் அவசரமாக குதித்து உயிர் தப்பினர். எனினும், தீயில் சிக்கி ஒரு பெண் உட்பட 9 பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், தப்பியோடிய ஓட்டுநர் மற்றும் நடத்துநரை தேடி வருகின்றனர்.
பிரதமர் மோடி இரங்கல்: இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் நரேந்திர மோடி எக்ஸ் தளத்தில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். மேலும், பிரதமர் தேசிய நிவாரண நிதியிலிருந்து உயிரிழந்தவர்களின் வாரிசுதாரர்களுக்குத் தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000-மும் நிவாரணம் வழங்கப்படும் என்று அவர் அறிவித்துள்ளார்.