டெல்லி அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து: குழந்தை உள்பட 9 பேர் உயிரிழப்பு

டெல்லி அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து: குழந்தை உள்பட 9 பேர் உயிரிழப்பு
Updated on
1 min read

புது டெல்லி: டெல்லி, விவேக் விஹார் பகுதியில் உள்ள நான்கு மாடி குடியிருப்பில், இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர், 4 பேர் காயமடைந்தனர். முதற்கட்ட விசாரணையின்படி, இந்த தீ விபத்து ஏசி வெடித்ததன் காரணமாகவே ஏற்பட்டிருக்கலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.

டெல்லியின் விவேக் விஹார் பகுதியில் அமைந்துள்ள நான்கு மாடி குடியிருப்பு கட்டிடத்தில் இன்று அதிகாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர், 4 பேர் காயமடைந்தனர். தீ விபத்து குறித்த தகவல் கிடைத்ததும், 12 தீயணைப்பு வாகனங்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தன. உயிரிழந்த ஒன்பது பேரில் ஐந்து பேரின் உடல்கள் கட்டிடத்தின் இரண்டாவது தளத்திலிருந்தும், மூன்று பேரின் உடல்கள் படிக்கட்டுப் பகுதியிலிருந்தும் மீட்கப்பட்டன. ஒருவரின் உடல் முதல் தளத்திலிருந்து மீட்கப்பட்டது.

முதல் தளத்தில் உயிரிழந்தவர் நவீன் என்பவரின் மனைவி ஷிகா ஜெயின் (45) என அடையாளம் காணப்பட்டுள்ளது. இரண்டாவது தளத்தில் சோட்டே லால் என்பவரின் மகன் அரவிந்த் (60), அனிதா ஜெயின் (58), நிஷாந்த் ஜெயின் (35), அஞ்சல் ஜெயின் (33) மற்றும் ஒன்றரை வயது குழந்தையான மாஸ்டர் ஆகாஷ் ஜெயின் ஆகியோர் சடலமாக மீட்கப்பட்டனர்.

மூன்றாவது தளத்தில் நிதின் ஜெயின் (50), அவரது மனைவி ஷெய்லி ஜெயின் (48) மற்றும் அவர்களது மகன் சம்யக் ஜெயின் (25) ஆகியோர் உயிரிழந்தனர். இதுவரை பத்துக்கும் மேற்பட்டோர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ள நிலையில், உயிரிழப்புகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

இந்த விபத்து குறித்த தகவல் அதிகாரிகளுக்கு அதிகாலை 3.47 மணியளவில் கிடைத்தது. தகவல் கிடைத்ததும், காவல் துறை அதிகாரிகள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தனர். சிறிது நேரத்திலேயே தீயணைப்பு வாகனங்களும் அங்கு வந்து சேர்ந்தன. காவல் துறையினரின் தகவலின்படி, கட்டிடத்தின் இரண்டாவது, மூன்றாவது மற்றும் நான்காவது தளங்களில் உள்ள குடியிருப்புகளைத் தீ சூழ்ந்துகொண்டது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் துயரச் சம்பவம் குறித்துப் பேசிய டெல்லி அமைச்சர் ரேகா குப்தா, இது மிகவும் வருத்தத்திற்குரிய ஒரு நிகழ்வு என்று குறிப்பிட்டார். மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்தார். காயமடைந்தவர்களுக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், அவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகவும் அவர் கூறினார்.

அத்துடன், அதிகாரிகள் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும், தேவையான அனைத்து உதவிகளையும் செய்து வருவதாகவும் அவர் உறுதி அளித்தார்.

பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கலைத் தெரிவித்ததுடன், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையப் பிரார்த்திப்பதாகவும் கூறினார்.

டெல்லி அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து: குழந்தை உள்பட 9 பேர் உயிரிழப்பு
ஈரான் தடுத்தும் ஹார்முஸ் ஜலசந்தியில் கொள்ளையர்கள் போல நடந்து கொண்டோம்: ட்ரம்ப் ஒப்புதல்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in