ராஜஸ்தானில் பக்தர்கள் சென்ற வாகனம் லாரி மீது மோதி விபத்து - 9 பேர் உயிரிழப்பு

ராஜஸ்தானில் பக்தர்கள் சென்ற வாகனம் லாரி மீது மோதி விபத்து - 9 பேர் உயிரிழப்பு
Updated on: 
1 min read

கோட்டா: ராஜஸ்தானின் கோட்டா-உதய்பூர் நெடுஞ்சாலையில் ஷம்புபுரா அருகே, காது ஷியாம்ஜி கோயிலுக்குச் சென்று திரும்பிக்கொண்டிருந்த பக்தர்களின் வாகனம், சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது மோதியதில் 9 பேர் உயிரிழந்தனர்; பலர் காயமடைந்தனர்.

இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலையில், காது ஷியாம்ஜி கோயிலிலிருந்து திரும்பிக்கொண்டிருந்தபோது பக்தர்கள் பயணித்த 'குரூஸர்' ரக வாகனம், கோட்டா-உதய்பூர் நெடுஞ்சாலையில் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது மோதியது. ​​ஷம்புபுரா கிராமத்திற்கு அருகில் நடந்த இந்த விபத்தில் மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் உயிரிழந்தனர், 6 பேர் காயமடைந்தனர்.

லாரி மீது மிக வேகமாக மோதியதில் பக்தர்கள் வந்த வாகனம் பலத்த சேதமடைந்தது; வாகனத்தில் இருந்தவர்கள் உள்ளேயே சிக்கிக்கொண்டனர். உள்ளூர் மக்கள் மற்றும் காவல்துறையினரின் உதவியுடன் காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு, கோட்டாவில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அதிகாரிகளின் தகவல்படி, அந்த வாகனத்தில் 16 குடும்ப உறுப்பினர்கள் பயணித்துள்ளனர். இதில் 9 பேர் உயிரிழந்தனர், மீதமுள்ளோர் படுகாயமடைந்தனர். அந்தக் குடும்பத்தை சேர்ந்த 36 பேர் மூன்று வாகனங்களில் காது ஷியாம்ஜியிலிருந்து தார் நகரை நோக்கிச் சென்றுகொண்டிருந்ததாகவும், அதில் இரண்டு வாகனங்கள் பின்னால் வந்த நிலையில், விபத்துக்குள்ளான வாகனம் மட்டும் முன்னால் சென்றதாக உறவினர் ஒருவர் தெரிவித்தார். விபத்துக்கான காரணம் குறித்து காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.

இந்த விபத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளதுடன், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என்றும், காயமடைந்தவர்களுக்கு 50,000 ரூபாய் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.

இந்த விபத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ள குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, ‘ராஜஸ்தானின் கோட்டாவில் சாலை விபத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்த செய்தி மிகுந்த துயரமளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்; காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்’ எனத் தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தானில் பக்தர்கள் சென்ற வாகனம் லாரி மீது மோதி விபத்து - 9 பேர் உயிரிழப்பு
ஓ.ம்: விமர்சனம் - நடிப்பு அரக்கர்களும், ஆன்மா இல்லாத ஸ்பை த்ரில்லரும்!

X