Published : 13 Jul 2014 10:00 AM
Last Updated : 13 Jul 2014 10:00 AM

கட்சி பேதமின்றி போஜ்புரி திரைப்படத்தை பார்த்து ரசித்த பிஹார் எம்எல்ஏக்கள்: சுயேச்சை எம்எல்ஏ தயாரிப்பில் உருவானது

கட்சிபேதமின்றி பிஹார் சட்டசபையின் சுமார் 70 உறுப்பினர்கள் போஜ்புரி மொழியில் உருவான திரைப்படத்தை ஒன்றாக அமர்ந்து பார்த்து ரசித்தனர்.

போஜ்புரியில் மொழியில் தயாரான, ‘பியார் மொஹபத் ஜிந்தாபாத்’ திரைப்படத்தின் சிறப்புக் காட்சி கடந்த வெள்ளிக்கிழமை பாட்னாவில் திரையிடப்பட்டது. இதை தயாரித்தவர் சுயேச்சை எம்.எல்.ஏ.வான வினய் பிஹாரி. இப்போது ஆளும் ஐக்கிய ஜனதா தளத்துக்கு ஆதரவளித்து வரும் வினய், இளைஞர் நலம் மற்றும் கலாச்சாரத் துறை அமைச்சராகவும் இருக்கிறார்.

அரசியலையும் காதலையும் இணைத்து சமூகத்துக்கு ஒரு நல்ல செய்தியைக் கூறும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில், பிஹாரின் 11 எம்.எல்.ஏ.க்கள் நடித்திருக்கிறார்கள். எனவே, இதன் சிறப்புக் காட்சிக்கு அனைத்துக்கட்சி எம்.எல்.ஏ.க்களை அழைத்திருந்தார் வினய். இதை ஏற்று ஆளும் ஐக்கிய ஜனதா தளம், அதன் தோழமைக் கட்சியாக மாறிவிட்ட ராஷ்டிரிய ஜனதா தளம் மற்றும் எதிர்க்கட்சியான பாரதிய ஜனதா உட்பட எழுபதுக்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள் ஒன்றாக அமர்ந்து படத்தைப் பார்த்து ரசித்தனர்.

முன்னதாக, முதல்வர் ஜிதன்ராம் மாஞ்சி மற்றும் நிதிஷ் குமாரின் வருகைக்காக அரை மணி நேரம் காத்திருந்தனர். ஆனால் அவர்கள் வரவில்லை. படம் பார்த்தவர்களில் அனைவரின் கவனத்தையும் கவர்ந்தவர் முன்னாள் எம்.எல்.ஏ.வும், கிரிமினல் வழக்குகளில் சிக்கியுள்ள அரசியல்வாதியுமான ரண்வீர் யாதவ். இவர் தனது இரு மனைவிகளுடன் (பூனம் தேவி, கிருஷ்ணா தேவி) வந்திருந்தார்.

உடன் பிறந்த சகோதரிகளான இவர்களில் பூனம் தேவி ஐக்கிய ஜனதா தள கட்சி எம்.எல்.ஏ.வாக இருக்க, கிருஷ்ணா தேவி ராஷ்டிரிய ஜனதா தளம் சார்பில் மக்களைவைத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். கணவர் ரண்வீருக்கு பாரதிய ஜனதா கட்சியில் போட்டியிட சீட் கேட்டு கிடைக்கவில்லை. இவர் தனது இரு மனைவிகளுடன் ‘பியார் மொஹபத் ஜிந்தாபாத்’ திரைப்படத்தில் நடித்திருக்கிறார் என்பதுதான் கவனத்தை கவர்ந்துள்ளது.

கடந்த 15 ஆண்டுகளாக பிஹார்வாசிகளின் மொழியான போஜ்புரியில் தயாராகும் திரைப்படங்கள் மிகவும் பிரபலமடைந்து, தனக்கென தனி இடத்தைப் பிடித்து வருகின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x