

ரூபாய் நோட்டு நடவடிக்கையினால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து சட்டப்பேரவையில் நிறைவேற்றிய தீர்மானத்தை பிரதமரிடம் நேரில் சமர்பிக்க இருந்த கேரள அனைத்துக் கட்சிக் குழுவுக்கு பிரதமரைச் சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டது.
கேரள சட்டப்பேரவையில் அனைத்துக் கட்சிகளும் சேர்ந்து ஒருமனதாக நிறைவேற்றிய தீர்மானத்தில் ரூபாய் நோட்டு நடவடிக்கையினால் மாநில கூட்டுறவுத் துறைகளுக்கு ஏற்பட்டுள்ள பின்னடைவையும், நெருக்கடியையும் பற்றி சில முடிவுகள் எடுக்கப்பட்டது.
இந்தத் தீர்மானத்தை பிரதமரை நாளை (வியாழன்) சந்தித்து அனைத்துக் கட்சிக் குழு நேரில் அளிப்பதாக இருந்தது, ஆனால் இதற்கு அனுமதி மறுக்கப்பட்டதால் டெல்லி பயணத்தை அனைத்துக் கட்சி குழு ரத்து செய்துள்ளது.
பிரதமரைச் சந்திக்க முடியாது ஆனால் நிதியமைச்சர் அருண் ஜேட்லியைச் சந்திக்கலாம் என்று பிரதமர் அலுவலகம் தகவல் அனுப்பியுள்ளது.
இந்நிலையில், “நிதியமைச்சரை மட்டும் சந்திக்க நாங்கள் டெல்லி செல்ல போவதில்லை. நான் ஏற்கெனவே மாநில நிதியமைச்சருடன் அருண் ஜேட்லியை சந்தித்து விட்டேன். அனுமதி மறுக்கப்பட்டதற்கு பிரதமருக்கு எங்களது கடும் கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்” என்று முதல்வர் பினரயி விஜயம் அவசரமாக அழைப்புவிடுத்த செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.